பிரதமர் ரணில் விக்ரமசிங்க Sky News-உடனான செவ்வியில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் எதிர்கால பயணம் தொடர்பில் தௌிவுபடுத்தினார்.
இதன்போது, எரிபொருள் விலையேற்ற பிரச்சினை ஒரு புறம் இருக்க, விவசாயத்திற்கு தேவையான உரம் இல்லாமை பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
உரப் பற்றாக்குறை காரணமாக அடுத்த போகத்தில் போதிய விளைச்சல் கிடைக்காமற்போகும் என எதிர்வுகூறிய பிரதமர், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இலங்கையில் உணவுப் பிரச்சினை ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார்.
குறித்த காலப்பகுதியில் பூகோள உணவுப் பிரச்சினையும் ஏற்படும் என்பதால், அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை மக்கள் எவ்வாறு வாழ்வது என்பதனை சிந்திக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.
கடன்களை மீள செலுத்த முடியாத நிலையில் இலங்கை இருப்பதை ஏற்றுக்கொண்ட அவர், ஏனைய நாடுகளினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் ஒத்துழைப்புடன் அப்பிரச்சினையை நிவர்த்திக்க எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இராஜினாமா செய்வது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் வழங்கினார்.
காலி முகத்திடலில் போராடும் இளைஞர்களும் சில அரசியல் கட்சிகளும் ஜனாதிபதி இராஜினாமா செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருப்பதாகக் கூறினார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிக்கின்ற போதும், ஜனாதிபதி இராஜினாமா செய்ய வேண்டும் என கூறவில்லை என்பதை ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
இரண்டு நிலைப்பாடுகள் காணப்படுகின்ற நிலையில், 21 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து, முன்னர் இருந்த 19 ஆவது திருத்தத்தை பலப்படுத்தி, பாராளுமன்றம் மற்றும் பிரதமரின் பலத்தை உறுதிப்படுத்துவது சிறந்தது என தாம் நினைப்பதாகக் கூறினார்.
அனைத்துக் கட்சிகளும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டிற்கு வந்து, எதிர்கால திட்டத்தை தயாரித்துக்கொள்ள முடியும் எனவும் பிரதமர் நம்பிக்கை வௌியிட்டார்.
வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அந்நியச் செலாவணி பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் நாட்டில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு தற்போது இலங்கைக்கு வர முடியாத நிலை நிலவுவதாக பதில் அளித்தார்.