கடனை மீள செலுத்துவதற்கான இயலுமையை அடிப்படையாகக் கொண்டு, Fitch எனப்படும் சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனத்தினால் இலங்கை தரமிறக்கப்பட்டுள்ளது.
C தரத்திலிருந்து RD (Restricted default) தரத்திற்கு Fitch தரப்படுத்தல் நிறுவனத்தினால், இலங்கை பின்தள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடன் தவணையை செலுத்த முடியாத நாடாக இலங்கை தற்போது பதிவாகியுள்ளது.
ஒரு மாத குறுகிய காலப்பகுதிக்குள் Fitch Ratings நிறுவனத்தின் தரப்படுத்தலில் இலங்கை மீண்டும் பின்தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பல்வேறு வகையிலும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு சர்வதேசத்தின் நாடுகள் பலவும் உதவிகளை வழங்க முன்வந்துள்ளன.
இலங்கைக்கான கடன் நிவாரணம் வழங்குவதற்கு அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட G7 நாடுகள் தீர்மானித்துள்ளதாக Reuters செய்தி வௌியிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொண்ட கடனை செலுத்த முடியாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளதால், நேற்று ஜெர்மனியில் நடைபெற்ற கூட்டத்தின் போது, G7 நாடுகளின் நிதி தொடர்பான பிரதானிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
இலங்கைக்கான நீண்டகால தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக G7 நாடுகள் கூறியுள்ளதாக Reuters செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு கடன் நிவாரணம் வழங்குவதற்கு ஒப்பீட்டளவிலான நிபந்தனைகளின் கீழ் பணியாற்றுமாறு G7 நிதித் தலைவர்கள் ஏனைய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் Reuters தெரிவித்துள்ளது.
இதேவேளை, G7 நாடுகளில் அங்கம் வகிக்கும் ஜப்பானும் இலங்கைக்கான மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.
UNICEF மற்றும் உலக உணவுத் திட்டம் (World Food Programme) மூலம் அத்தியாவசிய மருந்துகள், உணவுப்பொருட்களை இலங்கைக்கு வழங்குவதற்காக மனிதாபிமான உதவியாக 3 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் இரண்டு மாதங்களில் 25 அத்தியாவசிய மருந்துகளை UNICEF மூலம் பெற்றுக்கொள்வதற்காக 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படும் என கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.
எஞ்சிய 1.5 மில்லியன் டொலர்கள் மூலம் 15,000 நகர்ப்புற – கிராமப்புற மக்களுக்காகவும் 380,000 பாடசாலை மாணவர்களுக்காகவும் அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உட்பட
மூன்று மாதங்களுக்கான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் உலக உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளன.
இந்த நிதியுதவி, இலங்கை அரசாங்கமும் மக்களும் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை சமாளிக்க உதவும் என ஜப்பான் தூதரகம் நம்பிக்கை வௌியிட்டுள்ளது.
இதேவேளை, கடன் நிவாரணம் வழங்கும் G7 நாடுகளின் அறிவிப்பை நன்றியுடன் ஏற்பதாகவும் சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான இத்தகைய ஒத்துழைப்புகள், இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பிரதான உந்துசக்தியாக காணப்படுவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டம் தொடர்பான தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.