இந்த சவாலை ஏற்பதற்காக இடைக்கால ஜனாதிபதி பதவிக்காக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயரை முன்மொழிவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் 12 ஆம் திகதி செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நாட்டை மீண்டும் மீளக்கட்டியெழுப்ப முடியும். அந்த சவாலை ஏற்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தயாராக இருக்கின்றார்.
அதே போன்று ஏனைய எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் இதற்கு தயராக உள்ளனர். இது தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றோம்.
இதற்கு பாராளுமன்றத்திலுள்ள சகல கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த நெருக்கடியிலிருந்து மீள வேண்டும். இந்த பொறுப்பிலிருந்து எவராலும் விலக முடியாது.
தற்போதுள்ள நிலைமையில் அரசியல் நிகழ்ச்சி நிரல் முக்கியமல்ல. எவருக்கும் அவர்களது கட்சியோ அல்லது இலக்கோ முக்கியத்துவமுடையதல்ல. தற்போது எதிர்கொண்டுள்ள பாரிய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதே அவசியமானதாகும்.
நாட்டில் மீண்டும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் , பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி என்ற ரீதியில் பொறுப்புடன் செயற்பட எதிர்பார்த்துள்ளது.
அதற்கமைய இடைக்கால ஜனாதிபதி பதவிக்காக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயரை முன்மொழிவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஏகமனதாக தீர்மானித்துள்ளது என்றார்.