எரிபொருள் விநியோக கட்டமைப்பில் மீண்டும் ஏற்பட்டுள்ள நெருக்கடியினால் நாளை முதல் தனியார் பேரூந்து போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்படும்.அதற்கமைய நாடுதழுவிய ரீதியில் தனியார் பேரூந்துகள் 25 சதவீதமளவில் மட்டுப்படுத்தப்படும் என அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
தனியார் பேருந்து போக்குவரத்து சேவை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கி.யு ஆர் முறைமைக்கு கீழ் எரிபொருள் விநியோகம் கடந்த நாட்கள் முறையாக விநியோகிக்கப்பட்டன.தற்போது மீண்டும் எரிபொருளுக்கான வரிசை தோற்றம் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது.எரிபொருள் விநியோக கட்டமைப்பில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நாளை முதல் தனியார் பேருந்து போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்படும்.
அதற்கமைய இன்று முதல் 25 சதவீத பேருந்துகள் போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படமாட்டாது.தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் விநியோகத்தில் முறையான நடவடிக்கையினை எடுக்குமாறு வலுசக்தி அமைச்சிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக 50 சதவீதமான தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுப்படுத்தாமல் உள்ளன.பொருளாதார ரீதியில் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.பேரூந்து உரிமையாளர்கள் மற்றும் சேவையாளர்களுக்கு மானிய அடிப்படையில் எரிபொருளை வழங்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.