2021 க.பொ.த. உயர்த தர பரீட்சையின் பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கை பரீட்தத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன இதனை தெரிவித்துள்ளார்.
பெறுபேறுகளை, www.doenets.lk அல்லது results.exams.gov.lk அல்லது exams.gov.lk எனும் பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளங்களின் ஊடாக அறிந்துகொள்ள முடியும்.
கடந்த 2021 இல் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சை இவ்வருடம் பெப்ரவரி 07ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 05ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தது.
பரீட்சைக்கு விண்ணப்பித்தோர்
இப்பரீட்சைகள் 2,437 நிலையங்களில் இடம்பெற்றதோடு, இதில் 279,141 பாடசாலை பரீட்சார்த்திகளும் 66,101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் உள்ளிட்ட 345,242 மாணவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பத்திருந்தனர்.
பரீட்சைக்கு தோற்றியோர்
அதற்கமைய, 236,035 பாடசாலை பரீட்சார்த்திகளும், 36,647 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் இப்பரீட்சைகளுக்கு தோற்றியுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
62.9% பேர் பல்கலைக்கழகத்திற்கு தகுதி
பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளில் 149,946 பாடசாலை பரீட்சார்த்திகளும், 21,551 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் உள்ளடங்கலாக 171,497 பேர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பெறுபேறு இடைநிறுத்தம்
அத்துடன், இப்பரீட்சார்த்திகளில் 37 பாடசாலை பரீட்சார்த்திகளினதும், 12 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் உள்ளடங்கலாக 49 பேரினது பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, திணைக்களம் அறிவித்துள்ளது.
பெறுபேறுகளை தரவிறக்கம் செய்தல்
பெறுபேறுகள் வெளியிடப்பட்டு 24 மணித்தியாலங்களின் பின்னர் onlineexams.gov.lk/onlineapps/index.php/welcome/online_results எனும் முகவரி ஊடாக பின்வரும் முறையில் பெறுபேறுகளை தரவிறக்கம் செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பாடசாலைகளின் அதிபர்களும், விண்ணப்பங்களை அனுப்பும்போது, ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (User Name), கடவுச்சொல் (Password) மூலம், உரிய பாடசாலையின் பெறுபேறுகளை தரவிறக்கி அச்சுப் பிரதியை பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், அனைத்து மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் இது தொடர்பான பயனர்பெயர் (User Name) மற்றும் கடவுச்சொல் (Password) மூலம் குறித்த மாகாண மற்றும் வலய பெறுபேறுகளை தரவிறக்கம் செய்து/ கண்காணிக்க வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கும், பரீட்சை இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளடக்கி பெறுபேறு அட்டவணையை தரவிறக்க/ கண்காணிப்பதற்கான வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வருடம் மீண்டும் பரீட்சைக்கு தோற்ற வாய்ப்பு
இதேவேளை, இம்முறை 2021 க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மீண்டும் 2022 பரீட்சைக்கு தோற்ற செப்டெம்பர் 01 – 08 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளினதும் பேறுபேறுகளை, மீளாய்வு பெறுபேறுகள் வெளியிட்டதன் பின்னர் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களிடம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெறுபேறுகளின் மீளாய்வு
க.பொ.த. (உ/த) பரீட்சை மீளாய்வுக்கு ஒன்லைன் முறை மூலம் விண்ணப்பிப்பதற்கான திகதி தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படுமென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன அறிவித்துள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு
பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு பெறுபேற்று பிரிவு
011-2784208
011-2784537
011-3188350
011-3140314
011-2786616
துரித அழைப்பு இலக்கம்: 1911
மின்னஞ்சல் முகவரி: gcealexam@gmail.com
பெறுபேறுகளை கையடக்கத் தொலைபேசி ஊடாக SMS மூலம் பெற
Exams <இடைவெளி> சுட்டெண்
டைப் செய்து
பின்வரும் இலக்கத்திற்கு SMS செய்யவும்
Airtel – 7545
Dialog – 7777
Etisalat – 3926
Hutch – 8888
Mobitel – 8884