சுமார் 46 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகளை கற்பிட்டி நுரைச்சோலை பகுதியில் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இலங்கை கடற்படையினரால் நேற்று 23 ஆம் திகதி, அதிகாலை நுரைச் சோலை இளந்தடி பகுதியில் 155 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா பொதிகளும் இரண்டு கார்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் கடற்படை, தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கரையோரப் பகுதிகளை உள்ளடக்கிய வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொள்கிறது. இதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பலான விஜயவின் விசேட தேடுதல் நடவடிக்கை நேற்று நுரைச்சோலை பகுதியில் நடத்தப்பட்டது.
இதன்போது, இளந்தடி பகுதியில் வீடொன்றுக்கருகில் நிறுத்தப்பட்டிருந்த காரை சோதனையிட்டபோது 78 கஞ்சா பொதிகள் கொண்டு செல்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இதில் 155 கிலோ , 450 கிராம் கேரள கஞ்சா பொதியிடப்பட்டிருந்தன,
இரண்டு சந்தேக நபர்கள், இரண்டு கார், மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
இதன்படி, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா கையிருப்பின் மொத்த பெறுமதி 46 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என நம்பப்படுகிறது.
கேரள கஞ்சாவுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 35 மற்றும் 40 வயதுடைய இரண்டு சந்தேகநபர்கள் ராகம பகுதியைச் சேர்ந்தவர்களெனவும், அவர்களை நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்தது.