யாழ்ப்பாணம் மாநகரில் மறைந்த தம்பதியரின் சார்பில் நிறைவேற்றப்பட்ட அறுதி உறுதியின் மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினர் ஒருவரை கைது செய்தனர்.
சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை முற்படுத்திய பொலிஸார் பி அறிக்கையை தாக்கல் செய்தனர்.
யாழ்ப்பாண மேலதிக நீதிவான் திருமதி நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
“சந்தேக நபர் இது போன்ற மோசடிகளில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளார். அவருக்கு எதிராக மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறித்த காணி சந்தேக நபரால் வேறு ஒருவருக்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே விசாரணைகள் நிறைவடையாததால் சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிடுமாறும் பொலிஸார் சமர்ப்பணம் செய்தனர்.
சந்தேக நபர் சார்பில் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா முன்னிலையாகி பிணை விண்ணப்பம் தொடர்பில் சமர்ப்பணத்தை முன்வைத்தார்.
” இந்த வழக்குடன் தொடர்புய சிலரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும் அவர்கள் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.
முழு மோசடியையும் எனது கட்சிக்காரர் மீது சுமத்தி மற்றவர்களை பாதுகாக்கும் விதத்தில் புலன்விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது.
இயற்கை எய்திய இருவரின் கையொப்பங்கள் இடப்பட்டு காணியின் உரிமை மாற்றம் செய்வதற்கு எனது கட்சிக்காரரை தந்திரமாகப் பயன்படுத்தி உள்ளனர்.
உறுதியில் சாட்சிகளாக கையொப்பம் இட்ட இருவரில் ஒருவரே முதன்மை சூத்திரதாரி. இதில் பிரபல கல்லூரி ஒன்றின் முன்னாள் அதிபரும் சம்பந்தப்பட்டுள்ளார்.
கையூட்டு வழக்கு ஒன்றில் சந்தேக நபராக ஏற்கனவே பிணையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் போலிக் கையொப்பங்களில் ஒன்றையும் இட்டுள்ளார்.
மோசடியாக உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ள காணி பின்னர் இன்னொரு நபருக்கு மாற்றப்பட்டுள்ளது. முதல் உறுதியில் கையொப்பம் இட்ட ஒரு சாட்சி இரண்டாவது உறுதியிலும் அதே போன்று கையொப்பம் இட்டுள்ளார். இது தனி ஒரு மனிதர் மட்டும் செய்யக்கூடிய மோசடி அல்ல.
இந்த கூட்டு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்காமல் எனது கட்சிக்காரரை மட்டும் குற்றவாளி ஆக்குவது எந்த வகையில் நியாயமாகும்.
முழு உண்மையும் வெளிக்கொணரப்பட வேண்டும். சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸார் நேர்மையாக செயற்படவில்லை. எனவே, சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம், உதவி பொலிஸ் அத்தியட்சகர் தரத்துக்கு குறையாத பதவி நிலை கொண்ட அதிகாரி ஒருவர் புலன் விசாரணையைப் பொறுப்பேற்க வேண்டும். அதற்கான பணிப்புரையை வழங்க நீதிமன்றம் முன்வர வேண்டும்” என்று மூத்த சட்டத்தரணி என் ஸ்ரீகாந்தா சமர்ப்பணத்தை முன்வைத்தார்.
அதனை அடுத்து சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவு நடாத்தி வரும் புலன் விசாரணைக்கு கடும் அதிருப்தியை மன்று வெளியிட்டது.
இறந்த தம்பதிகளின் பேரில் நிறைவேற்றப்பட்ட அறுதி உறுதியில் சாட்சிகளாக கையொப்பம் இட்ட இரண்டு நபர்கள் மற்றும் உறுதியை நிறைவேற்றிய நொத்தாரிசு ஆகியோரை ஏன் இன்னமும் முற்படுத்தவில்லை என்று மன்று பொலிஸாரிடம் கேள்வி எழுப்பியது.
“சட்ட ஏற்பாடுகளுக்கு புறம்பாக போலி உறுதி மூலம் தனது பெயருக்கு காணியை உரிமை மாற்றம் செய்த நபருடன் மட்டும் இந்த விவகாரம் முடிந்துவிடவில்லை. இதில் ஒரு குழுவே சம்பந்தப்பட்டிருக்கின்றது என்பது தெரிகின்றது.
காணி மோசடிகள் நிகழ்ந்து வருவதற்கு சில நொத்தாரிசுகளின் செயற்பாடுகளும் காரணமாக உள்ளன. இந்த சூழ்நிலையிலேயே யாழ்ப்பாணத்தில் காணிகளின் விலை எகிறிக் கொண்டிருக்கின்றது என்பதை மறுக்க முடியாது.
எனவே இந்த வழக்கின் போலி உறுதி நிறைவேற்றுவதில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக மன்றில் முற்படுத்தப்பட வேண்டும்” என்று மேலதிக கட்டளையிட்டார்.
சந்தேக நபர் சார்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பொலிஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்ட போது சட்ட மா அதிபரின் ஆலோசனையை நாடவிருப்பதாக கூறப்பட்டது.
இந்தக் கட்டத்தில் அது தேவையில்லை. முதலில் சம்பந்தப்பட்ட அனைவரையும் நீதிமன்றில் முற்படுத்தி புலன் விசாரணையை நிறைவு செய்யுங்கள். அதன் பின்னர் சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற அவரின் திணைக்களத்திற்கு புலன் விசாரணைப் பதிவேட்டை அனுப்புங்கள்” என்று மேலதிக நீதிவான் பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.
சந்தேக நபரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிட்ட நீதிவான், அன்றைய தினம் மன்றில் முற்பட வேண்டும் என்று யாழ்ப்பாண மூத்த பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்டார்.