“இலங்கையில் இரட்டைப் பிரஜாவுரிமை உடையவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கான தடை நீக்கப்படலாம். சட்ட திருத்தம் ஒன்றைக் கொண்டு வருவதன் மூலம் இதை செய்வதற்கான சாத்தியம் இல்லாமல் இல்லை.”
– இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.
இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரம் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பியிடம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக உரிய நேரத்தில் கோட்டாபய ராஜபக்ச இரட்டைப் பிரஜாவுரிமையைத் துறந்தார். இலங்கைப் பிரஜையாகவே தேர்தலில் போட்டியிட்டார். எனவே, தேவை ஏற்படின் உரிய நேரத்தில் பஸில் ராஜபக்சவும் தீர்மானம் எடுக்கலாம். இரட்டைப் பிரஜாவுரிமையைத் துறப்பதா, இல்லையா என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும்.
‘மொட்டு’க் கட்சி என்பது பஸிலின் முழுப் பலத்தில் தங்கியிருக்கவில்லை. அவரும் எமக்கு மாபெரும் சக்தி.
இரட்டைப் பிரஜாவுரிமை உடையவர்களுக்கு இந்த நாட்டில் அரசியல் உரிமையை இல்லாது செய்வதற்கு நான் தனிப்பட்ட ரீதியில் எதிர்ப்பு. அது சரியான முடிவு அல்ல.
தனிநபரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனவே, எதிர்காலத்தில் மாற்றம் வரலாம்.
சட்ட திருத்தம் கொண்டு வந்து தடையை நீக்குவதற்கான மாற்றமாகவும் அது இருக்கலாம்” – என்றார்.