செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை காஞ்சிரமோட்டை கிராம மக்கள் அவஸ்தை! – நேரில் ஆராய்ந்த கஜேந்திரன்

காஞ்சிரமோட்டை கிராம மக்கள் அவஸ்தை! – நேரில் ஆராய்ந்த கஜேந்திரன்

2 minutes read

“வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டை கிராம மக்கள், பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட காணிகளைத் துப்பரவு செய்து தமது வாழ்வாதாரத்துக்குத் தேவையான விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வன இலாகாவினர் இடையூறாக இருக்கின்றனர். சம்பந்தப்பட்ட அமைச்சுக்குத் தெரியப்படுத்தி நெருக்கடிகளில் இருந்து விடுவிக்க இருக்கின்றேன்.”

– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

காஞ்சிரமோட்டை கிராம மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக அப்பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டு ஆராய்ந்தமை தொடர்பாக இன்று கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள காஞ்சிரமோட்டை கிராமத்துக்குக் கடந்த 8 ஆம் திகதி அப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அங்கு சென்றிருந்தேன்.

மீளக்குடியமர்த்தப்பட்ட 40 குடும்பங்கள் அங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பிரதேச செயலகத்தாலே காணிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும், அந்தக் காணிகளைத் துப்பரவு செய்து தமது வாழ்வாதாரத்துக்குத் தேவையான விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வன இலாகா திணைக்களத்தினர் இடையூறாக இருந்து வருகின்றனர்.

பலரைக் கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நாடு பொருளாதார வீழ்ச்சி அடைந்திருக்கின்ற போது விவசாயத்தை ஊக்குவிப்பதாக விவசாய அமைச்சு கூறிக்கொண்டிருக்கின்ற நிலைமையில் இந்த மக்கள் விவசாய நடவடிக்கைகளுக்காக வனப்பகுதியை துப்பரவு செய்ய முனைகின்ற போது அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றங்களுக்கு அலைக்கழிக்கப்படுகின்றார்கள்.

குறித்த பகுதியில் கிட்டத்தட்ட 8 வருடங்கள் கடந்து விட்டாலும் அடிப்படை வசதிகள் எதுவும் பெற்றுக்கொள்ளப்படவில்லை. ஒழுங்கான வீதிகள் இல்லை. வீதிகள் சேறும் சகதியுமாகக் காணப்படுகின்றன. அங்கே முதல் பஸ்கள் சென்று வந்தன. தற்போது ஒழுங்கற்ற வீதிகள் இருப்பதால் பஸ்கள் வருவது நிறுத்திவிடப்பட்டுள்ளன. மிக மோசமாக யானை நடமாட்டம் உள்ள இடமாக இருக்கின்றது.

பாடசாலை செல்லும் மாணவர்கள் 5 கிலோமீற்றர்களுக்குக் கால்நடையாகச் சென்று பின்னர் பஸ்ஸில் ஏறி பாடசாலைக்குச் செல்ல வேண்டிய துரதிஷ்டவசமான சூழல் காணப்படுகின்றது. சுத்தமான குடிதண்ணீரைப் பெற்றுக்கொள்வதிலும் பிரச்சினை இருக்கின்றது.

மீளக் குடியேறியிருப்பவர்கள் பலர் இந்தியாவில் இருந்து கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பின்னர் திரும்பியவர்கள். அவர்கள் அங்கே பல இன்னல்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த விடயம் தொடர்பாக அப்பகுதி மக்கள், என்னை நேரடியாக வந்து பார்வையிட்டு அது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தெரியப்படுத்தி வன இலாகாவினுடைய கெடுபிடிகளை நீக்குமாறு கேட்டிருந்தார்கள். அதன் அடிப்படையிலே அங்கு சென்று ஊடகத்தின் மூலம் தெரியப்படுத்துகின்றேன்.

எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்துக்குச் சென்ற பிற்பாடு இந்த விடயங்கள் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அமைச்சுக்குத் தெரியப்படுத்தி நெருக்கடிகளில் இருந்து விடுவிக்கப்பட இருக்கின்றேன்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More