“வடக்கு, கிழக்கில் மக்களின் காணிகள் அவர்களுக்கே சொந்தம். அவற்றை எவரும் ஆக்கிரமித்து வைக்கவோ – அவற்றை எவரும் சுவீகரிக்க முயற்சிக்கவோ நான் இடமளிக்கமாட்டேன். மக்களின் சம்மதமின்றி சுவீகரிக்கப்பட்டு இன்னமும் விடுவிக்கப்படாமல் இருக்கின்ற காணிகளைப் படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பேன்.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பிடெல்ஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை உள்ளிட்ட குழுவினர் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தனர். அந்தச் சந்திப்பிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
இந்தச் சந்திப்பின் போது மன்னார் காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் விளக்கமளிக்கப்பட்டன.
அவை தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
மடு யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருவது தொடர்பிலும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் அருட்தந்தை ஜொய்ஸ் பெப்பி சொசாய், அருட்தந்தை ஆண்டனி சொசாய் உள்ளிட்ட அருட்தந்தையர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்த்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.