வாகனேரி கண்டத்து வயல்களுக்கு நீர்ப் பாச்சுகின்ற ஆறுகளிலும், வயல்களிலும், அணைக்கட்டுகளிலும் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கை இடம்பெறுவதை அறிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நேற்று அங்கு திடீர் விஜயம் மேற்கொண்டார். அத்துடன் அதனைப் பார்வையிட்டு உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“வனப் பாதுகாப்புத் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுகின்றது. இது பாரிய அளவில் சந்தேகத்தை உண்டுபண்ணுகின்றது. பின்னணியில் யார் உள்ளார்? மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு அரச சார் அமைச்சர்கள் என்ன செய்கின்றார்கள்?
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுச் சூழலுக்கான அமைச்சர் உள்ளார். பல தலைமுறைகளாக மக்கள் விவசாயம் செய்து வந்த காணிகள் அரச காணிகள் வனத்துறைக்குச் சொந்தமான காணிகள் எனக் கையகப்படுத்திவிட்டு சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் வள சுரண்டல்களுக்கு இடமளிக்கின்றார்கள். ஆனால், அங்குள்ள மக்கள் காட்டுக்குள் விறகு வெட்டுவதற்காகச் செல்லும் வேளை வனப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு அதற்கான தண்டனை உட்பட 20 ஆயிரம் ரூபா மட்டில் அபராதமும் செலுத்தியுள்ளார்கள்.
இவை இப்படி இருக்க மிகவும் வெளிப்படையான முறையில் மண் அகழ்வானது இடம்பெறுகின்றது. வனத்துறையினருக்குச் சொந்தமான காணியில் மண் சேமிக்கப்பட்டு கடத்தப்படுகின்றது. இதன் பின்னணியில் வனத்துறையும் உள்ளதா?
மட்டக்களப்பு மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான காரணம் இதுதான். இவ்வாறான விடயங்கள் வெளியில் வரும் என்னும் பயமே காரணம்.
மண் அகழ்வுக்கு எமது மாவட்ட இரு அமைச்சர்களும் பின்னால் உள்ளார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.
மக்களின் வரிப்பணத்தில் பாதுகாப்புக்கு எனக் கட்டப்படுள்ள வரம்பை உடைத்து அதன் மூலம் மண் கடத்துகின்றனர்.
அடுத்ததாக இங்குள்ள அரசியல்வாதிகள் தமது அரசியல் சுயலாபம் மற்றும் சுயநலம் கருதி தமிழ், முஸ்லிம் எனப் பாகுபாடு காட்டி மக்களைப் பிரித்துவிட்டு இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஒன்றாகச் செயற்படுகின்றார்கள்.
ஒவ்வொருவருக்கு ஒவ்வெரு பக்கமாக பிரித்து மக்களுக்குச் சொந்தமான வளங்கள் சுறையாடப்படுகின்றன. இந்த நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும். இல்லையேல் எமது மக்களும் எதிர்காலச் சந்ததியும் நிர்க்கதியாகுவது வெகுவிரைவில் நடைபெறும்” – என்றார்.