மறைந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியுமான முத்து சிவலிங்கத்தின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது.
அரசியல்வாதிகள், தொழிற்சங்கவாதிகள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள், தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோரின் பங்கேற்புடன் இறுதிக்கிரியைகள் நடைபெற்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோரின் இரங்கல் செய்திகள் வாசித்துக் காட்டப்பட்டன.
மூத்த அரசியல் – தொழிற்சங்கவாதியும், முன்னாள் பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் நேற்று (23) காலமானார்.
அவரின் பூதலுடன் அஞ்சலிக்காக அன்னாரின் நுவரெலியாவில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் இன்று (24) இல்லத்திலிருந்து நுவரெலியா நகர் வழியே எடுத்துச் செல்லப்பட்டு, நுவரெலியாவில் உள்ள கட்சி காரியாலயத்துக்குக் கொண்டு சென்று, பின்னர் நுவரெலியா பொது மயானத்தில் மாலை 5.30 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.
இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் ராமேஷ்வரன் உள்ளிட்டோர் கட்சி கொடியைப் போத்தி கௌரவம் செலுத்தினர். இந்தியத் தூதரக அதிகாரிகளும் இல்லத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தி இரங்கல் புத்தகத்தில் குறிப்பெழுதினர்.
நேற்று முதல் பெருந்திரளான மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். தொழிலாளர் தேசிய சங்கம் உட்பட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இறுதி நிகழ்வில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.