செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இரட்டை வேடத்தில் ரணில்! – கஜேந்திரகுமார் சாடல்

இரட்டை வேடத்தில் ரணில்! – கஜேந்திரகுமார் சாடல்

2 minutes read

“இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒருபுறம் பேச்சுக்கு அழைப்பு விடுத்து விட்டு, மறுபுறம் தமிழர்களின் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமிக்க இடமளிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது மறைக்கப்பட முடியாத உண்மை.”

– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்

அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கையில் மொத்த இராணுவத்தினரது எண்ணிக்கையில் அதிகளவானோர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

யுத்தம் முடிவடைந்த பின்னரும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரது செயற்பாடுகள் எல்லை கடந்து செல்கின்றன. காணி ஆக்கிரமிப்பு தொடர்ந்து இடம்பெறுகின்றன.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண பேச்சுக்கு ஜனாதிபதி ஒருபுறம் அழைப்பு விடுத்து விட்டு, மறுபுறம் தமிழர்களின் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமிக்க இடமளிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது மறைக்கப்பட முடியாத உண்மை.

அரசு இனவாதம், பௌத்த சித்தாந்தத்துடன் செயற்படுகின்றது. இவ்வாறான பின்னணியில் எவ்வாறு தீர்வு காண முடியும்?

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தற்போதும் இலக்கு வைக்கப்படுகிறார்கள். இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அரசு இனவாதத்தை விடுத்து செயற்படும் வரை ஒருபோதும் நாடு முன்னேற்றமடைய முடியாது

நாட்டு மக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்யவில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிரான செயற்பாடுகள் மாத்திரம் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

தனிப்பட்ட அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றும் உரிமை அனைவருக்கும் உண்டு. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அரசுக்கு நாட்டு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் இன்று வசந்த முதலிகே உள்ளிட்டோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கொடுமையை தமிழர்கள் நன்கு அறிவார்கள்.இதன் காரணமாகவே பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுக்கின்றோம். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

காலிமுகத்திடலில் தோற்றம் பெற்ற போராட்டம் வன்முறையற்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மே மாதம் பிரதமராகப் பதவியேற்ற போது காலிமுகத்திடல் போராட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். அப்போராட்டம் பயங்கரவாதம் என அவர் அப்போது குறிப்பிடவில்லை.மே மாதம் 9 ஆம் திகதி போராட்டக்களத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தற்போது மறைக்கப்பட்டுள்ளார்கள்.

ஆளும் தரப்பினரால் நாட்டு மக்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நெருக்கடிக்குள்ளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ஜனநாயக போராட்டத்தை எவ்வாறு பயங்கரவாதப் போராட்டம் என்று குறிப்பிடுவது. ஆகவே, போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் பாதுகாப்பை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உறுதிப்படுத்த வேண்டும்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More