யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் தலைக்கவசம் அணியாது சென்ற இளைஞர்களை வழிமறித்துப் பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் ஆகியோர் இணைந்து மூர்க்கத்தனமாகத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த இளைஞரை வைத்தியசாலையில் அனுமதிக்காது , பொலிஸார் கைது செய்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
மானிப்பாய், ஆலடி சந்தியில் இன்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மானிப்பாய் – ஆலடி சந்தியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் இருந்த வேளை, வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களில் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர் தலைக்கவசம் அணியாது இருந்துள்ளார்.
அவர்களை வழிமறித்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, “நாம் தலைக்கவசம் அணியாதது தவறுதான். அதற்குத் தண்டத்தை எழுதித் தாருங்கள். நேரமாகிவிட்டது” என்று குறித்த இரு இளைஞர்களும் கூறினர்.
பொலிஸாருடன் இளைஞர்கள் திருப்பிக் கதைத்ததும் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்போது , அருகில் இருந்த இராணுவத்தினர் இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் இராணுவத்தினர் எவ்வாறு தாக்கலாம் என வினவ முரண்பட்ட போது , பொலிஸாரும் இராணுவத்தினருடன் இணைந்து தாக்கினர்.
அதேநேரம் வீதியால் மோட்டார் சைக்கிள்களில் வந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இறங்கி இளைஞர்கள் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டனர்.
அதையடுத்து அங்கு பொதுமக்கள் கூடியதும், தாக்குதலில் காயமடைந்த பாலமுரளி நிரோஷன் (வயது 28) என்ற இளைஞரைக் கைது செய்த பொலிஸார், அவரை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.