புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அதிகாரம் கிடைத்தால் வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்வோம்! – சாணக்கியன் தெரிவிப்பு

அதிகாரம் கிடைத்தால் வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்வோம்! – சாணக்கியன் தெரிவிப்பு

4 minutes read

சமஷ்டி கட்மைப்பில் அதிகாரத்தை வழங்கினால் எமது மாகாணங்களை நாங்கள் அபிவிருத்தி செய்வோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (03) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிடடார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலும் நகரங்களைக் காண முடியாது. நகரங்கள் இருந்தால்தான் நகரங்களை அபிவிருத்தி செய்யலாம்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு மாத்திரம் 50 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நகரங்கள் இல்லை.

நகர அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் ஒருபகுதி கூட கிராமிய அபிவிருத்திக்கு ஒதுக்கப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை, எழுவான் கரை ஆகிய பிரதேசங்கள் உள்ளன. எழுவான்கரை பிரதேசத்தில் நகரங்கள் இல்லை.

2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆளும் கட்சிகளுக்கு வாக்களித்தால்தான் அபிவிருத்தி செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டது.

இவ்வாறான பின்னணியில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதேச அபிவிருத்திக்கு இரு பிரதிநிதிகளையும், அரசியல் உரிமைக்காக இரு பிரதிநிதிகளையும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ளார்கள்.

காணி அபகரிப்பு, அரசியல் கைதி விடுதலை, சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்து எமக்கு மக்கள் வழங்கிய பொறுப்பை முறையாகச் செயற்படுத்தி வருகின்றோம்.

ஆனால், 2020 ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை. ஏனைய மாவட்டங்களில் அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்றுள்ளன. அபிவிருத்திக்காக தெரிவு செய்யப்பட்ட இரு பிரநிதிகளுக்கு செயற்திறன் இல்லையா என்பது தெரியவில்லை.

மட்டக்களப்பில் படுவான்கரையையும், எழுவான்கரையையும் இணைக்கும் பட்டிருப்புப் பாலம் எனது பாட்டனார் சி.மு.இராசமாணிக்கம் இருந்ந காலத்தில் இருந்ததைப் போன்று இன்றும் அதே நிலையில்தான் உள்ளது. கிராமங்களை நகரங்களாக மாற்றியமைக்க வேண்டுமாயின் கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

மண்டூர் பிரதேசத்தில் இருந்து பிரதான நகரத்துக்கு வருவதற்கு பாலம் ஒன்று இல்லாத காரணத்தால் பெரும்பாலானோர் மண்டூர் பிரதேசத்தில் இருந்து வெளியேறியுள்ளார்கள்.

அம்பிளாந்துறையை ஒரு நகரமாக்க வேண்டுமாயின் அங்கு ஒரு பாலம் நிர்மாணிக்கப்பட வேண்டும். ஆனால், அடிப்படை அபிவிருத்திகள் தற்போது கவனத்தில் கொள்ளப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோட்டைக்கல்லாறு பகுதியில் உள்ள மக்கள் ஏ.ரி.எம். சேவை வசதியை பல காலமாகக்  கோருகின்றார்கள். நகரமாக அபிவிருத்தி செய்ய முன் ஒரு ஏ.ரி.எம். சேவை வசதியை வழங்குங்கள்.

கோட்டைக்கல்லாறு பகுதிக்கு ஒரு ஏ.ரி.எம். இயந்திரத்தை கூட கொண்டு வர முடியாத நிலையில்தான் மட்டக்களப்பு மாவட்ட இரு அபிவிருத்தி நாயகர்கள் உள்ளார்கள்.

செங்கலடி சந்தை முழுமையாக அபிவிருத்தி செய்யப்படவில்லை. மழைக் காலங்களில் இந்தச் சந்தைக்குள் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.

அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு முழுமையாகச் சென்றடைவதில்லை. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காலம் காலமாக அமைச்சராகப் பதவி வகிக்கின்றார். மறுபுறம் அங்கஜன் இராமநாதன் பலமுறை இராஜாங்க அமைச்சுக்களை வகித்துள்ளார்.

தற்போது வடக்கு, கிழக்கில் இரு தமிழர்கள் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வகிக்கின்றார்கள். ஆனால், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்தியடையவில்லை.

இதன்காரணமாகவே அதிகாரத்தை வழங்குமாறு கோருகின்றோம். சமஷ்டிக் கட்டமைப்பில் அதிகாரத்தை வழங்கினால் எமது மாகாணங்களை நாங்கள் அபிவிருத்தி செய்வோம்.

பல ஆண்டுகாலமாக எமது மக்களின் முன்னேற்றத்துக்காக அதிகாரத்தைக் கோருகின்றோம். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்தியடைந்தால் அது நாட்டின் பொருளாதாரத்துக்கு வலுவானதாக அமையும்” – என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, “இலங்கை வங்கியுடன் கலந்தாலோசித்து கோட்டைக்கல்லாறு பகுதிக்கு ஏ.ரி.எம். இயந்திய சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கின்றேன்” – என்றார்.

மீண்டும் உரையாற்றிய சாணக்கியன் எம்.பி., “மிக்க நன்றி. நாட்டின் நீதி அமைச்சர் ஏ.ரி.எம். இயந்திரத்தைப்  பெற்றுக்கொடுப்பதாகக் குறிப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ வீடமைப்பு அமைச்சராகப் பதவி வகித்த போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலான வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் அந்த அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவில்லை .இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் வாடகை வீடுகளிலும், வீடு இல்லாமலும் வாழ்கின்றார்கள். ஆகவே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளை அரசியல் நோக்கமற்ற வகையில் நிறைவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்குக்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் உரிமைகளில் புறக்கணிப்புக்கள் காணப்படுகின்றன. அரசியல் உரிமை ஊடாகவே அபிவிருத்தியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தைப் போக்கும் செயற்றிட்டத்தை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம். ஒருசில இனவாதிகள் அதிகாரப் பகிர்வு தொடர்பில் தவறான நிலைப்பாட்டைத் தோற்றுவித்தார்கள்.

இலங்கை மேலவை கூட்டணி என்பதை அமைத்து தற்போது மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். பிரதான நகரங்களின் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் திட்டம் எம்.சி.சி. ஒப்பந்தத்தில் உள்வாங்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தை விமல் வீரவன்ச தலைமையிலான மேலவை இலங்கை கூட்டணியின் உறுப்பினர்கள்தான் இல்லாமலாக்கினார்கள்.

எம்.சி.சி. தொடர்பில் தவறான நிலைப்பாட்டை இவர்கள்தான் தோற்றுவித்தார்கள். பிளவுபடாத இலங்கைக்குள்தான் அதிகாரத்தைக் கோருகின்றோம்.

அனைத்து மாகாணங்களுக்கும் அதிகாரங்களை வழங்குங்கள். தென்மாகாணத்துக்கு அதிகாரம் வேண்டாம் என்றால் அது உங்களின் பிரச்சினை.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு அபிவிருத்தியும், அரசியல் உரிமையும் இல்லாத நிலை காணப்படுகின்றது. எமது உரிமைக்காகத் தொடர்ந்து போராடுகின்றோம்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More