“நாட்டு மக்கள் தேர்தலைக் கோருகின்றனர். அதனால் 2023 ஆகஸ்ட் மாதமளவில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படலாம்” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு அந்தக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஐ.தே.கவின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான கால எல்லையை அறிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது:-
“உள்ளூராட்சி சபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் என்பன ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும். அப்போது செலவீனத்தையும், வீண் விரயங்களையும் குறைக்க முடியும். தனித்தனியே தேர்தல்களை நடத்துவது இனியும் ஏற்புடையது அல்ல. இது தொடர்பில் ஜனாதிபதியிடம் யோசனை முன்வைக்கப்படும்.
2023 மார்ச் மாதத்துக்குப் பின்னர் ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். 2023 ஆகஸ்ட் மாதமளவில் ஜனாதிபதித் தேர்தலை எதிர்பார்க்க முடியும்.
நாட்டு மக்கள் தேர்தலைக் கோருகின்றனர். மக்கள் ஆணையுடன் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி பதவி விலகியுள்ளதால், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே ஏற்புடையதாக இருக்கும்” – என்றார்.