இலங்கையில் நிலவிய கடும் குளிர், விடாத மழை, அதனால் ஏற்பட்ட பெரு வெள்ளம், சுழன்றடித்த புயல் காற்று ஆகிய சீரற்ற காலநிலை காரணமாகக் கடந்த இரு நாள்களில் மட்டும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சுமார் 600 கால்நடைகள் ஒரேயடியாகச் சாவடைந்துள்ளன. மேலும் 400 கால்நடைகள் வரை சாப்படுக்கையில் கிடக்கின்றன.
கிடைக்கப் பெற்ற தரவுகளின் அடிப்படையில் 400 மாடுகள், 200 ஆடுகள் என 600 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
இவற்றில் கிளிநொச்சி மாவட்டத்தில் 250 கால்நடைகள் உயிரிழந்துள்ள அதேநேரம் மேலும் 190 கால்நடைகள் முழு மையாக இயங்காத நிலையில் வீழ்ந்து கிடக்கின்றன. இருப்பினும் சிகிச்சைகள் இடம்பெறுகின்றன.
இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் 190 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 170 கால்நடைகள் படுக்கையில் விழுந்து கிடக்கின்றன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 160 கால்நடைகளின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 60 மாடுகளும், 90 ஆடுகளும் அடங்குகின்றன. அதேநேரம் 17 மாடுகளும், 23 ஆடுகளும் என 60 கால்நடைகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டு படுக்கையில் கிடக்கின்றன. யாழ்., மருதங்கேணியில் ஒரு பட்டியில் மட்டும் 58 உயர் இன ஆடுகள் கூண்டோடு மரணித்துள்ளன.