கொழும்பு, நாரஹேன்பிட்டி – பார்க் வீதியிலுள்ள நான்கு மாடிக் கட்டடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை – ஹாலிஎலதிக்வெல்ல ஹேன பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இராமலிங்கம் மாணிக்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நபர் குறித்த கட்டடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தார் என்றும், சில தேவைகளுக்காக மூன்றாவது மாடிக்குச் சென்ற போது பாதுகாப்பற்ற இடத்திலிருந்து கீழே விழுந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவருடன் கட்டடத்தில் பணிபுரியும் ஏனைய இருவரும், அவர் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடக்கின்றார் என்று கட்டட நிர்மாணப் பணிகளுக்குப் பொறுப்பான நபரிடம் தெரிவித்தனர் என்றும், பின்னர் அவர் வந்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை கொழும்பு பொலிஸ் வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.