யாழ்ப்பாணம் (பலாலி) சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் மீண்டும் இன்று ஆரம்பமாகின. இந்த விமான நிலையத்துக்கு 33 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் இன்று சென்னை விமானம் தரையிறங்கியது.
2019ஆம் ஆண்டு திறக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாட்டில் கொரோனா வைரஸ் உச்சம் பெற்ற போது இழுத்து மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீண்ட இழுபறியின் பின்பு இன்று சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து வருகை தந்த முதலாவது விமானம் முற்பகல் 11.35 இற்குத் தரையிறங்கியது.
இந்த விமானத்தில் 14 பயணிகளும், 14 விருந்தினர்களும் என 28 பேர் வருகை தந்தனர்.
இவர்களைச் சுற்றுலா இராஜாங்க அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ராஜேஸ் நட்ராஜ் ஆகியோர் வரவேற்றனர்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ். மாவட்ட செயலாளர் க.மகேசன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
சென்னையிலிருந்து அலையன்ஸ் எயார்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனமே பலாலிக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
இந்த விமான சேவை நிறுவனத்தால் வாரத்தில் திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய நான்கு தினங்களுக்குச் சேவைகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து முற்பகல் 10.50 யாழ்ப்பாணம் (பலாலி) சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானம் பிற்பகல் 1.30 இற்கு மீண்டும் புறப்படவுள்ளது.
பயணி ஒருவர் 20 கிலோ வரையான பொருட்களை விமானத்தில் எடுத்துச் செல்ல முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.