செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ‘மொட்டு’ – ‘யானை’ உறவு நிலைக்குமா?

‘மொட்டு’ – ‘யானை’ உறவு நிலைக்குமா?

3 minutes read

யானையும், மொட்டும் பரஸ்பரம் தத்தமக்குரிய முட்டுகளாக மாறியுள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கீரியும் பாம்புமாக கடந்த ஆட்சிக்காலத்தில் காணப்பட்ட மொட்டுக் கட்சியும், யானைக் கட்சியும் பாலும் சுவையுமாக பரஸ்பர ஆட்சி அதிகார தேவைக்காக மாறியுள்ளன.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மத்திய வங்கியைக் கொள்ளையடித்த ரணில் விக்கிரமசிங்கவை சிறைக்குள் தள்ளுவோம் என்று அன்றைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த சூளுரைத்தார். அவரைப் பின்பற்றி வியாழேந்திரனும் ரணில் மீது பல குற்றச்சாட்டுகளைக் கூறி மொட்டுக்குப் பலம் சேர்க்க நினைத்தார்.

தற்போது என்ன நடந்திருக்கின்றது.எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது. இரண்டாண்டுகளுக்குள் கோட்டாவின் இனவாத மணல் கோட்டை சரிந்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே ஒரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்ற ரணில் விக்கிரமசிங்கவை மொட்டுக் கட்சியினர் தம்பக்கமாக ஈர்த்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல், அவரைப் பிரதமர் ஆக்கியதோடு நின்று விடாமல், பகீரதப் பிரயத்தனம் செய்து நாடாமன்றத்தின் மூலமாக ஜனாதிபதியுமாக்கியுள்ளனர்.

ரணிலைச் சிறையில் அடைத்துத் தண்டிக்க நினைத்த மொட்டுக் கட்சியினர் தற்போது நாட்டின் அதியுயர் கெளரவமான பதவியை வழங்கித் தம்மைப் பாதுகாத்துள்ளனர். அதாவது ரணிலுக்கு அவமானமளிக்கத் திட்டமிட்ட மொட்டுக் கட்சியினர் தற்போது வெகுமானம் அளித்துள்ளர்.

ஒருவகையில் பார்த்தால் மொட்டுக் கட்சியில் 144 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் காணப்பட்டனர். அவர்களில் எவரிலும் நம்பிக்கையற்ற நிலையில், தம்மைப் பொருளாதாரக் குற்றத்தில் இருந்தும், மக்களின் வெறுப்பில் இருந்தும் மீட்கக்கூடிய ஒரே தலைவராக ரணில் விக்கிரமசிங்கவை ராஜபக்சக்கள் உறுதியாக நினைத்துள்ளனர் அல்லது நினைக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

அதேவேளை, தற்போதைய நிலையில் மொட்டுக் கட்சியினரும் ஐக்கிய தேசியக் கட்சியினரும் பரஸ்பர புரிதலின் அடிப்படையில் தேர்தலுக்கான கூட்டணியை அமைக்கவும் முற்பட்டுள்ளனர். அந்தவகையில் போர்க்குற்றம், பொருளாதாரக் குற்றம் என்ற இரு குற்றங்களை இழைத்த மொட்டுக் கட்சியினரை யானைக் கட்சியின் தலைவரான ரணில் பிணையெடுக்க முற்பட்டுள்ளார்.

மேலும் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்த நிலையிலுள்ள யானைக் கட்சியை மீட்க மொட்டுக் கட்சியினர் தயாராகியுள்ளனர். அதாவது ஐக்கிய மக்கள் சக்தியை உடைப்பதற்கு ஜனாதிபதி ரணில் நினைக்கின்றார். பொருளாதார நெருக்கடியில் இருந்தும் சர்வதேச நெருக்குவாரத்தில் இருந்தும் தப்பித்துக் கொள்ள ராஜபக்சக்கள் வழி தேடுகின்றார்கள்.

மொட்டுக் கட்சியோடு இணைந்து போட்டியிடுவது தற்கொலைக்கு ஒப்பானது என்று அக்கட்சியின் முன்னாள் தோழமைக் கட்சிகள் கருதுகின்றன.இந்தநிலையில் மொட்டுக்கு முட்டாக யானையும், யானைக்கு முட்டாக மொட்டும்தான் எஞ்சியுள்ளன.

மொட்டுக் கட்சியினருக்கு அரசியல் முதலீடு சிங்கள பெளத்த அடிப்படை வாதம் மட்டுமேயுள்ளது. கடந்த தேர்தலில் அதனை உச்சமாகப் பயன்படுத்தி அமோக வெற்றியீட்டினாலும் இரண்டாண்டுகள் கூட அந்த வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

மேலும் சஹ்ரான் தரப்பினரின் தற்கொலைக் குண்டு வெடிப்புக்கான காரணத்தைப் பேராயர் மல்கம் ரஞ்சித் தெளிவாக விளக்கியுள்ளார். அதாவது ராஜபக்சக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொண்ட சூழ்ச்சித் திட்டம் என்பதைப் பேராயர் உள்நாட்டு மக்களுக்கும், சர்வதேசத்துக்கும் உரத்த தொனியில் கூறியுள்ளார்.

சஹ்ரான் குழுவின் குண்டுவெடிப்பு நடந்த காலத்தில் குண்டு வெடிப்புக்குக் காரணம் பாதுகாப்புப் பலவீனம் என்ற மொட்டுக் கட்சியினரின் கருத்துக்களைப் பேராயர் மல்கம் ரஞ்சித் பூரணமாக நம்பி கோட்டாபய ராஜபக்சவுக்குச் சாதகமான நிலைப்பாட்டில் இருந்தார்.

தற்போது ஆட்சி மாற்றத்துக்கான சூழ்ச்சித் திட்டமே குண்டு வெடிப்பு என்பதைப் பேராயர் புரிந்துவிட்டார். அப்படியான நிலைமையில் இலங்கைக் கிறிஸ்தவர்கள் இந்த அரசின் மீது வெறுப்படைந்துள்ளனர்.

அதேவேளை., தமிழ், முஸ்லிம் மக்களும் மொட்டுக் கட்சியினரின் இனமத வாதத்தால் வெறுப்படைந்து விட்டனர். பொருளாதார நெருக்கடியால் ஒட்டுமொத்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மொட்டுக் கட்சியை மட்டுமல்லாமல் அவர்களைப் பாதுகாக்க வந்த ரணில் மீதும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்தநிலையில்தான் மொட்டும் யானையும் பரஸ்பரம் முட்டுக்கொடுத்து அரசியலில் தப்பிப் பிழைக்க நினைக்கின்றன.

நாட்டின் பொருளாதாரம் என்பது கடன்களில்தான் தங்கியுள்ளது. எனவே, ஜனாதிபதி ரணில் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் உலக நாடுகளில் இருந்து கடன்கள் பட்டாவது நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பார் என்று மொட்டுக் கட் சியினர் கருதுகின்றனர்.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு கூட்டணி அமைப்பதற்கு எவரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவேதான் மொட்டுக் கட்சியினராகிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினருக்கும் யானைச் சின்னக்காரர்களான ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் தேர்தல் கூட்டணிக்கான இணக்கப்பாடு தெரிகின்றது. ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஐக்கிய தேசியக் கட்சியும் இணையக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டால், மொட்டுக்கட்சியுடனான ஒட்டுறவை ஜனாதிபதி ரணில் வெட்டிக்கொள்ளவும் நினைக்க வாய்ப்பு உள்ளது.

ஜனாபதி ரணில் தனிப்பட்ட முறையில் மொட்டின் உதவியுடன் பல சவாலான கட்டங்களைத் தாண்டியுள்ளார். ஆனால், மொட்டோடு தேர்தல் கூட்டணியை ஐக்கிய தேசியக் கட்சி அமைத்தால் மொட்டுக் கட்சியின் அடிப்படைவாதம், ஊழல் மோசடிகள், போர்க்குற்றம் பொருளாதாரக் குற்றம் அனைத்தையும் ஐக்கிய தேசியக் கட்சியும் சுமந்துதான் ஆகவேண்டும்.

2020 இல் சறுக்கிய யானையும், 2021 இல் சறுக்கிய மொட்டும் பரஸ்பரம் தத்தமக்குரிய முட்டுகளாக மாறியுள்ளன. முட்டுகளால் ஆறுதல் பரிசுகள் கிடைத்துள்ளன. ஆனால், எதிர்காலத்தில் அதிகார இலக்கை அடைவதற்குச் சாத்தியமில்லை” – என்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More