உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதன் மூலம் அரசாங்கம் மாறப்போவதில்லை. அதனால் நாட்டின் தற்போதை பொருளாதார நெருக்கடி நிலையில் தேர்தலுக்காக கோடிக்கணக்கில் பணம் ஒதுக்குவதால் அதன் பாதிப்பு மக்களுக்கே ஏற்படும். அவ்வாறு இல்லை என்றால் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (டிச. 22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவி்க்கையில்,
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண்பதற்கு குறிப்பிட்டதொரு காலத்துக்கு சில கஷ்டமான தீர்மானங்களை எடுக்கவேண்டி ஏற்படுகின்றது.
அவ்வாறான தீர்மானங்களை எடுப்பதற்கு தைரியமான தலைவர்கள் யாரும் இருக்கவில்லை. அதனால்தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு பயமின்றி இதனை பொறுப்பேற்றார். வரி அதிகரிப்பதை தவிர அரசாங்கத்துக்கு வேறு வருமான வழி எதுவும் இல்லை. அதனால் கஷ்டத்துக்கு மத்தியிலும் மக்கள் குறுகிய காலத்துக்கு இதனை பொறுத்திருக்கவேண்டும்.
அத்துடன் நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும்போது உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த, 10பில்லியன் தேவையாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் நடத்துவதில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அந்த தேர்தலுக்கான எந்தளவு பணம் செலவழிப்பதற்கு அரசாங்கத்திடம் இருக்குமா?. நாட்டின் தற்போதைய நிலையில் இந்தளவு பணம் ஒதுக்க முடியுமா? இருக்கும் பணத்தை தேர்தலுக்கு செலவழித்தால், தேர்தலுக்கு பின்னர் அத்தியாவசிய தேவைகளுக்கு பணம் இல்லாமல்போகும்.
அப்படியானால் மீண்டும் பழைய நிலைமைக்கு பல மணிநேர மின் துண்டிப்பு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு போன்ற பிரச்சினனைகள் ஏற்படும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தி அதில் யார் வெற்றிபெற்றாலும் தற்போதைய அரசாங்கமோ ஜனாதிபதியோ மாறப்போவதில்லை.
அப்படியாக இருந்தால் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்லவேண்டும். அல்லது பாராளுமன்ற தேர்தலுக்கு செல்லவேண்டும். ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதற்கும் சிலர் தயார் இல்லை.
அதனால் தேர்தல் ஆணைக்குழு, தங்களின் நிலைமையில் இருந்து மாத்திரம் சிந்தித்து செயற்படாமல், அடிமட்ட மக்களின் நிலைமையும் பார்க்க வேண்டும். மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மக்களுக்கு தேர்தல் தேவையில்லை.
நிம்மதியாக வாழவே வேண்டும். பாடசாலை உபகரணங்களின் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி கவனம் செலுத்தி இருக்கின்றார் என்றார்.