“இரண்டு மாதங்களுக்குள் அரசியல் தீர்வை வழங்க முடியுமா? இது ரணிலின் நாடகம் என்று எங்களுக்குத் தெரியும். அதனால்தான் ஜனாதிபதி கூட்டிய சர்வகட்சி மாநாட்டை நாங்கள் புறக்கணித்தோம்.”
– இவ்வாறு ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
‘அரசியல் தீர்வை வழங்குவதற்காக ஜனாதிபதி கூட்டிய சர்வகட்சி மாநாட்டில் நீங்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை?’ என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நீண்டகாலப் பிரச்சினையை இரண்டு மாதங்களுக்குள் தீர்க்க முடியுமா? இது பொய் என்று விளங்கவில்லையா? இது சர்வதேசத்தை ஏமாற்றும் செயல்.
உண்மையில் அரசியல் தீர்வை முன்வைப்பதென்றால் புதிய அரசமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். அதனூடாகத்தான் தீர்க்க முடியும்.
உண்மையில் இதைச் செய்வதற்கான வாய்ப்பு 2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில் ரணிலுக்கு இருந்தது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் நாடாளுமன்றில் இருந்தது. அப்போது செய்யாமல் இப்போது இரண்டு மாதங்களுக்குள் செய்யப் போகின்றேன் என்பதை நம்ப முடியுமா?
அடுத்த சர்வகட்சிக் கூட்டம் இருப்பது ஜனவரி நடுப்பகுதியில். அது முடிந்து பெப்ரவரி நடுப்பகுதியில் எப்படித் தீர்வை வழங்குவது?” – என்று அவர் கேள்வி எழுப்பினார்.