கடலட்டைப் பண்ணை வேண்டும் எனக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் – பண்ணைப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி, யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் ஊடாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தை அடைந்தது.
பேரணியின் நிறைவில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கான மகஜர் கடற்றொழில் அமைச்சரின் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது.
“கடந்த காலங்களில் பல்வேறு தொழில் முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த போதிலும், தற்போதைய நிலையில், பொருளாதாரச் சுமைகளை எதிர்கொள்ளும் அளவுக்குப் போதுமான அளவு வருமானத்தைப் பெற முடியாத நிலையில் நல்ல வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய கடலட்டைப் பண்ணை எங்களுக்கு வேண்டும்” எனக் கோரியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம் என்று அதில் கலந்துகொண்டவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.