மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடி பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவர் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஜ.எஸ்.ஜ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவருடன், தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டில் காத்தான்குடியைச் சேர்ந்த 30 வயதுடைய குறித்த சந்தேகநபர் நேற்றிரவு பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்தியாவில் கோயம்புத்தூரில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் ஷேக் ஹிதாயத்துல்லா மற்றும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களில் பங்கேற்றதாகக் கூறப்படும் சனோபர் அலி ஆகியோர் கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சந்தேகநபர்கள் 2022 பெப்ரவரியில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியின் ஆசனூர் மற்றும் கடம்பூர் பகுதிகளில் உள்ள வனப்பகுதியின் உட்பகுதியில் குற்றவியல் சதித்திட்டத்தில் ஈடுபட்டதுடன், இலங்கையில் 2019 ஏப்ரலில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்பில் இருந்தார்கள் எனத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இந்தியர்களுடன் காத்தான்குடியைச் சேர்ந்த 30 வயதுடைய உவர் லெப்பை அஹமட் நுஸ்கீன் பேஸ்புக்கில் தொடர்புகளைப் பேணி வந்துள்ளார் என்று இந்திய புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை புலனாய்வுப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டதற்கு இணங்க, காத்தான்குடி பழைய கல்முனை வீதி எம்.பி.சி.எஸ். குறுக்கு வீதியைச் சேர்ந்த குறித்த நபர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.