ஆசிரியர்களின் தற்காலிக இணைப்பை நீடிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு செயலாளருக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக ஆசிரிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் இன்று செவ்வாய்க்கிழமை (ஜன.14) அன்று கல்வி அமைச்சு செயலாளர்க்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் பிரதீப் தெரிவித்துள்ளார்
மூன்றாம் தவணை வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடாத்திச் செல்வதற்கு ஆசிரியர்கள் பல்வேறுப்பட்ட பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர்.
இதில் போக்குவரத்து மற்றும் சுகாதார பிரச்சணைகள் காரணமாக ஆசிரியர்களுக்கு 2022.12. 31ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்த தேசிய மற்றும் மாகாண தற்காலிக இணைப்பை 2023. மார்ச் 24ஆம் திகதி வரை நீடிப்பதற்கான கோரிக்கை தொடர்பாக சங்கமானது உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றது.
கல்வி அமைச்சு செயலாளரால் ஊடக அறிக்கையின் மூலம் வெளியிட்ட அறிக்கையானது சட்ட ரீதியான பூரணமான கடிதம் இல்லை என்பதனையும் மாகாண கல்வி பணிப்பாளர்கள் இக்கடித்தை ஏற்றுக்கொள்ளாமல் பல்வேறுப்பட்ட அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக தற்காலிக இணைப்பில் இருக்கும் ஆசிரியர்கள் கடூமையான அசௌகரியங்களுக்கு ஆளாகியுள்ளனர். இங்கு கல்வி அமைச்சு வெளியிட்ட ஊடக அறிக்கையானது சட்டரீதியற்றது எனவும் இதற்கு தகுந்த கடிதத்தை கல்வி அமைச்சு செயலாளரின் கையெழுத்துடன் வெளியிடும்படி இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக தேசிய அமைப்பாளர் பிரதீப் அவர்கள் தெரிவித்துள்ளார்.