யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு மீண்டும் மேயர் தெரிவு இடம்பெறவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் நிறைவேற்றப்பட முடியாத சூழல் ஏற்பட்ட போது, மேயர் வி.மணிவண்ணன் பதவியைத் துறந்தார். இதையடுத்துக் குழப்ப நிலை ஏற்பட்டது.
உள்ளூராட்சி விதிகளின் அடிப்படையில் மீண்டும் மேயர் தெரிவு இடம்பெறாது என வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் அறிவித்திருந்தார்.
யாழ். மாநகர சபையின் எதிர்காலம் குறித்து சட்டமா அதிபரிடம் வினவவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
எனினும், மீண்டும் மேயர் தெரிவு நடத்தப்படலாம் என்றும் சிலர் கருத்துத் தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில், மீண்டும் மேயர் தெரிவு நடைபெறவுள்ளது என்று வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார். அது குறித்த வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது.