உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் வெவ்வேறான நான்கு நிலைப்பாடுகளை கொண்டிருக்காமல், பெரும்பான்மையான ஆதரவுடன் ஒரு நிலைப்பாட்டின் அடிப்படையில் செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னம், மேலதிக சொலிசிடர் ஜெனரால் நரின்புள்ளே, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உட்பட தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இந்தச் சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்ட போது ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நான்கு நிலைப்பாடுகளை முன்வைத்தனர்.
தேர்தல் தொடர்பில் சுயாதீனமாகத் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே நான்கு நிலைப்பாடுகளை விடுத்து அனைவரும் பெரும்பான்மை தீர்மானத்துக்கு அமைய ஒரு நிலைப்பாட்டை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் அறிவுறுத்தினார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாகச் செயற்படுவதற்குத் தடையேதும் கிடையாது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.