ஆஸ்திரேலியா: தமிழ் அகதி குடும்பத்துக்காக நிரந்தர விசா கோரி போராடிய தமிழ் அகதியின் விசா காலாவதி
ஆஸ்திரேலியாவில் பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பத்தினர் நிரந்தரமாக வசிக்க அனுமதிக்க வேண்டும் என கடந்த நான்காண்டுகளாக போராடிய வந்தவர்களில் வாசினி ஜெயக்குமார் எனும் தமிழ் அகதியும் முக்கியமான ஒருவர். தனது தோழியின் விசாவுக்காக போராடிய அவர் இன்று தன்னுடைய விசாவுக்காக போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ் தஞ்சக்கோரிக்கையாளர்களான வாசினி ஜெயக்குமார் மற்றும் பிரியா நடேசலிங்கம் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதை விட சகோதரிகளைப் போன்றவர்கள்.
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இலங்கையிலிருந்து படகு வழியாக வெளியேறிய அவர்களுக்கு பல தடைகளுக்கு பின்பு ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்த் மாநிலத்தில் உள்ள பிலோயலா பகுதி புதிய வாழ்வளிக்கும் இடமானது. பின்னர், வாசினி ஜெயக்குமார் பிரிஸ்பேனுக்கு சென்ற பிறகும் அவர்களிடையே பிணைப்பு தொடர்ந்தது.
பின்னர் திடீரென ஒரு நாள், பிரியா- நடேசலிங்கம் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளின் விசாக்கள் காலாவதியானதாக ஆஸ்திரேலிய எல்லைப்படையால் கைது செய்யப்பட்டனர். முதலில் இத்தகவலை எப்படி வெளியில் சொல்வது எனத் தெரியாத நிலையில், உள்ளூர் பொருட்கள் வாங்கும் விற்கும் பேஸ்புக் குழுக்களில் வாசினி ஜெயக்குமார் பதிவிட்டிருக்கிறார். இத்தகவல் பிலோயலா மக்களிடையே பரவி பல்வேறு கட்டப் போராட்டங்களாக உருவெடுத்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பிரியா குடும்பத்தினருக்கு நிரந்தர விசாக்கள் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இப்படியான சூழலில், பிரியாவைப் போலவே ஆஸ்திரேலியாவுக்கு வாசினி மற்றும் அவர்களது குடும்பத்தினரும் படகில் சென்றவர்கள். கடந்த 2017ம் ஆண்டு வாசினி, அவரது சகோதரி மற்றும் குடும்பத்தினருக்கு பாதுகாப்பான புகலிட விசாக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் அவர்கள் தற்காலிகமாக 5 ஆண்டுகள் வரை வாழ அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிச்சயத்தன்மையற்ற விசா நிலையினால், மாற்றுத்திறனாளியான வாசினியின் சகோதரி ஜனனியை பராமரிக்க தேவையான செலவுகளை சமாளிக்க வாசினியின் குடும்பம் திணறி வருகிறது.
“கடந்த பத்தாண்டுகளாக நாங்கள் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறோம். ஆனால் எனது சகோதரிக்கு ஒரு சரியான கழிப்பறை கூட இல்லை என்பது மிகவும் வேதனையாக இருக்கிறது,” எனக் கூறுகிறார் வாசினி ஜெயக்குமார்.
வாசினி ஜெயக்குமார், அவரது கணவர் ரிஸ்வான், மற்றும் மூன்று இளம் குழந்தைகள் விசா மற்றும் குடியுரிமைக்கான விண்ணப்ப பரிசீலனையில் பல்வேறு கட்டங்களில் காத்திருப்பவர்களாக உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த வாரம் வாசினி மற்றும் அவரது இரண்டு வயது மகளின் விசா காலாவதியாகி இருக்கிறது. அவர்களது சமீபத்திய விசா விண்ணப்பத்தை ஆஸ்திரேலிய அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என்பதால் கடுமையான மன அழுத்தத்துக்கு இடையே அவர்கள் காத்திருக்கின்றனர்.
“பத்தாண்டுகள் கடந்த பிறகும், இன்னும் நிர்கதியான நிலையிலேயே இருக்கிறோம். இது எப்போது மாறும் என்ற அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரை இல்லை. ஏதாவது நடக்கும் என நாங்கள் காத்திருக்கின்றோம். இதோ அறிவிப்பு வருகிறது என்று சொல்லாதீர்கள், இப்போதே செய்யுங்கள்,” எனக் கோரியிருக்கிறார் வாசினி ஜெயக்குமார்.
ஆஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் மற்றும் பாதுகாப்பான புகலிட விசாக்களில் வசித்து வரும் 19 ஆயிரம் அகதிகள் நிரந்தரமாக வாழ்வதற்கான அனுமதியை ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் விரைவில் வழங்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.