இந்தியாவுக்கான கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக காங்கேசன்துறையில் துறைமுக கட்டுமானங்களை விரைவாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கப்பல் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலர் அடங்கிய குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தனர். காங்கேசன்துறையில் இறங்குதுறை அமைத்தல், சுங்கத் திணைக்களத்தை நிறுவுதல் உள்ளிட்ட பணிகளை உடனடியாக ஆரம்பிப்பது தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்தனர்.
அதன் பின்னர் வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். வடக்கு மாகாண சபையின் உதவிகள் எந்த அடிப்படையில் தேவைப்படும் என்பதை ஆளுநருக்கு அவர்கள் தெளிவுபடுத்தினர்.