தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் அரசுத் தலைமையுடன் தமிழர் தரப்பு நேற்று முதல் நான்கு நாள்களுக்குத் தொடர்ந்து நடத்துவதற்கு உத்தேசத்திருந்த பேச்சுக்கள் நேற்றுடன் இடைநிறுத்தப்பட்டன. உடனடி விடயங்களை அரசு தரப்பு நிறைவு செய்வதற்கு ஒரு வார கால அவகாசம் அளித்து, பேச்சை முடக்கியது தமிழ் கூட்டமைப்பு.
நேற்று மாலை மீண்டும் பேச்சுக்கள் ஜனாதிபதி செயலகத்தில் அரசு தரப்புக்கும் தமிழர் தரப்புக்கும் இடையில் நடைபெற்றன.
இந்தப் பேச்சுக்களில் அரசு தரப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணங்க ஆகியோர் பங்குபற்றினர்.
தமிழர் தரப்பில் கூட்டமைப்பு பிரமுகர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்குபற்றினர்.
நேற்றைய சந்திப்பில் புளொட் தலைவர் த. சித்தார்த்தன் மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் பங்குபற்றவில்லை.
நேற்றைய சந்திப்பின் பெறுபேறுகள் தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. தெரிவித்த தகவல்கள் வருமாறு:-
“உடனடிப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பாக கடைசி இரண்டு கூட்டங்களில் சொன்ன விடயங்களைத்தான் திரும்பவும் அரசு தரப்பினர் இப்போதும் கூறினார்கள். ஐந்து அரசியல் கைதிகளை விடுதலை செய்யத் தயாராக உள்ளோம் என்ற பழைய கதையையே பேசினர்.
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயங்கள் தொடர்பாக உண்மையைக் கண்டறியும் ஒரு பொறிமுறையை சட்டத்தின் மூலம் உருவாக்கப் போகின்றோம் என்றார்கள். சட்டமூலம் எங்கே என்று கேட்டால், அது இன்னும் தயாராகவில்லை, விரைவில் தயாராகும் என்றார்கள்.
நில விடுவிப்பு குறித்து கேட்டால், ஜனாதிபதி தாம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகின்றார் என்றும், அங்கு பேசி முடிவெடுக்கலாம் என்றும் கூறுகின்றார்.
ஆகவே, நடைமுறைக்கு ஒன்றும் வரவில்லை. இருக்கின்ற அதிகாரப் பரவலாக்கள் விடயங்களை அப்படியே நடைமுறைப்படுத்துவது குறித்து ஒரு குறிப்பு ஏற்கனவே கொடுத்திருந்தேன்.
அதில் முதலாவது – தேசிய காணி ஆணைக்குழுவை உடன் நியமித்து, விசால காணிக் கொள்கையை ஏற்படுத்தலாம் என்று கூறி இருந்தேன். அதற்கு ஜனாதிபதி ‘ஓம்’ என்று சம்மதித்தார். அது செய்யலாம் என்றார். “உடனே செய்யலாம், அந்த ஆணைக் குழுவை ஜனாதிபதிதான் நியமிக்க வேண்டும், அதை உடன் செய்யுங்கள்” – என்றேன். அதற்கும் சம்மதித்தார்.
அடுத்து மாகாண பொலிஸ் படையை உருவாக்க வேண்டும் என்றேன். பல காரணங்களைக் கூறிப் பின்னடித்தார்கள். வேறு, வேறு பிரச்சினைகளைக் கூறினார்கள். அவை இருக்கலாம், ஆனால், நீங்கள் இதை அமுல்படுத்துவோம் என்று எல்லோருக்கும் இதுவரை கூறி வருகின்றீர்கள், இதைச் செய்ய முடியாது என்றால் அதைத்தானே நீங்கள் வெளியே சொல்ல வேண்டும் என்று கேட்டேன்.
அன்று சர்வகட்சி மாநாட்டிலும் சட்டத்தில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்துவோம் என்றுதானே கூறினீர்கள், இதற்கு வேறு ஒரு சட்டமும் நிறைவேற்ற தேவையில்லை, ஜனாதிபதியே இதை உடனடியாக நடைமுறைப்படுத்தலாம் என்றேன். ஆனால், அதற்குச் சரியான பதில் இல்லை.
சாதாரண சட்டங்களில் திருத்த வேண்டிய விடயங்களையும் சுட்டி இருந்தேன். அதிகாரப் பகிர்வை தடுப்பதற்கு செய்யப்பட்ட அந்தச் சட்டங்களைத் திருத்த வேண்டும் என்று கூறினேன். அதற்கும் அரசு தரப்பில் பதில் திருப்தியாக வரவில்லை.
மாகாணங்களின் அதிகாரங்களை சட்டங்கள் மூலம் பறித்தெடுத்துள்ளீர்கள், அவற்றைத் திருத்துவது தொடர்பான விடயத்திலும் அரசு தரப்பிடமிருந்து உருப்படியான பதில் வரவில்லை.
பாடசாலைகளும் வைத்தியசாலைகளும் மாகாணங்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன. அவை மீள மாகாணங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றேன். மாகாண முதலமைச்சராக இருந்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதனை ஆமோதித்து, வரவேற்றார்.
தேசிய பாடசாலை என்ற ஏற்பாடே பிழையான விடயம் என்று அவர் கூறினார். அதற்குத் தேசிய கல்விக் கொள்கை ஒன்றை உருவாக்குகின்றோம், அதன் மூலம் திருத்தலாம் என்றார்கள்.
எல்லாம் முடிய நான் ஒரு விடயத்தைச் சொன்னோம். இந்த விடயங்கள் ஒன்றிலும் ஒரு முன்னேற்றமும் இல்லை, எல்லாம் பிறகு, பிறகு என்றால் எப்போது முடிப்பது? – என நாம் கேள்வி எழுப்பினோம்.
இல்லை, யாவற்றையும் ஒரு வார காலத்திற்குள் முடிக்கலாம் என அரசு தரப்பில் கூறப்பட்டது.
”சரி, நாம் ஒரு வார கால அவகாசம் தருகின்றோம். ஒருவார காலத்துக்குள் நீங்கள் என்னென்ன செய்திருக்கிறீர்கள், எதை எதை செய்வீர்கள் என்பதை அறிய தந்தால் அதன்பின்னர் அடுத்த சந்திப்புக்கு ஒரு திகதியை தீர்மானிக்கலாம், திரும்பப் பேசலாம்.” – என்றேன்.
அதனால் 11,12, 13 ஆம் திகதிகளில் மீண்டும் கூடத் தேவை இல்லை, அப்படிக் கூறினால் இவற்றைத்தான் திரும்பத் திரும்ப கூறுவீர்கள் என்று கூறினேன்.
அதன்படி ஒரு கிழமையில் – வரும் 17ஆம் திகதி – நீதி அமைச்சர் விஜயதாஸ என்னுடன் தொடர்பு கொண்டு, என்னென்ன செய்யப்பட்டிருக்கின்றன, எது, எது செய்யப்பட உள்ளன என்பதை விவரமாக அறிவித்தால், அதை வைத்து நாம் தீர்மானிப்போம். பிறகு சந்திப்புகள் எப்போது நடப்பது என்பது பற்றி அறிவிக்கலாம் என்றோம்.
கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி கூடிய சர்வகட்சித் தலைவர்கள் மாநாட்டை வரும் 26 ஆம் திகதி மீளவும் கூட்டலாம் என்று ஜனாதிபதி ஆலோசனை தந்தார்.
அதற்கு இடையில் ஒரு வாரத்தில் நான் கூடி என்னென்ன முன்னேற்றம் உள்ளது என்பதை தொடர்ந்து சந்தித்து கவனிக்கலாம், அதன்பின்னர் அடுத்த சந்திப்புக்குத் தேதி முடிவு செய்யலாம் என்றோம்.”
– இவ்வாறு சுமந்திரன் எம்.பி. நேற்றைய சந்திப்பு பற்றித் தகவல் தந்தார்.