செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரி 10 கோடி ரூபா இழப்பீடு வழங்க வேண்டும்!

ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரி 10 கோடி ரூபா இழப்பீடு வழங்க வேண்டும்!

2 minutes read

உளவுத் தகவல்கள் கிடைத்தும் 2019 ஏப்ரல் 21 – உயிர்த்த ஞாயிறு தினமன்று பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதன் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவர் அடிப்படை மனித உரிமையை மீறியுள்ளனர் எனவும், இவர்கள் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

போதுமான உளவுத் தகவல்கள் இருந்தும் உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன எனத் தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகளும் கடந்த 2022 ஒக்டோபர் 5 ஆம் திகதி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டன.

மேற்படி அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹார, எல்.டி.பி.தெஹிதெனிய, முர்து பெர்ணான்டோ, எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய ஏழுபேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த மனுக்களின் தீர்ப்பு, இன்று வழங்கப்பட்டது.

இதன்படி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 கோடி ரூபாவையும், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் தலா 7 கோடி 50 இலட்சம் ரூபாவையும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 5 கோடி ரூபாவையும் , தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் ஒரு கோடி ரூபாவையும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 6 மாத காலத்துக்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேற்படி இழப்பீட்டு தொகைகள் பெறப்பட்டு, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு 10 இலட்சம் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு 5 இலட்சம் ரூபாவும் இழப்பீடாகப் பகிரப்பட வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தனது இரு பிள்ளைகளை இழந்த தந்தையான நந்தன சிறிமான்ன, சுற்றுலாத்துறை வர்த்தகர் ஜனக விதானகே, இரு கத்தோலிக்க மதகுருமார், ஷெங்ரில்லா ஹோட்டலில் குண்டுத் தாக்குதலில் சிக்கிய சட்டத்தரணி மோதித்த ஏக்கநாயக்க, கத்தோலிக்க மதத் தலைவர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட 12 தரப்பினரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More