“தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர் தாயகப் பிரதேசத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் தனித்துப் போட்டியிடவுள்ளது. எம்மோடு இணைந்து செயற்பட்ட அனைவரும் மீண்டும் வர வேண்டும். அதற்காக அனைவரையும் வரவேற்கின்றோம்.”
– இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் நடைபெற்றது.
அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கட்சியின் ஊடகப் பேச்சாளர் அருண் தம்பிமுத்து மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பொருளாதார நெருக்கடியான காலத்திலே உள்ளூராட்சி சபைகளை ஒருமித்த கருத்தோடு சரியான முறையில் கொண்டு செல்ல வேண்டிய தேவையுள்ளது. எனவே, அனைவரையும் வரவேற்கின்றோம்.
உள்ளூராட்சி சபைகள் பல கட்சிகளைக் கொண்டு அமைந்தாலும் கூட மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். இது மாகாண சபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் அல்ல.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தனியாகப் போட்டியிட்டாலும் அனைவருடனும் இணைந்து வேலை செய்வோம்.
பல சபைகளில் நாங்களே ஆட்சி அமைத்தாலும் கூட அனைவரையம் உள்வாங்கி ஒருமித்துச் செயற்படுவதுவே நோக்கமாக இருக்கின்றது.
தமிழ்க் கட்சிகள் ஒன்றாகப் போட்டியிடப் போகின்றன, தனித்தனியாகப் போட்டியிடப் போகின்றன எல்லாம் அரசியலுக்காக ஒவ்வொரு கட்சிகளும் தமது முடிவுகளை எடுக்கின்றனர்.
நாம் மற்ற கட்சிகளின் முடிவுகளைப் பற்றி சிந்திக்கவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணிக்கென்று தெளிவான கருத்து இருக்கின்றது. தெளிவான கொள்கை இருக்கின்றது.
நாம் பல வருடங்களின் பின்னர் கட்சியை மீள்கட்டமைத்து முன்சென்று கொண்டிருக்கின்றோம். எனவே, ஏனைய கட்சிகளின் கூட்டணி இல்லாமல் நாம் தனித்துப் போட்டியிடுவோம்” – என்றார்.