செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவருக்குக் கொலை மிரட்டல்! – சபையில் சஜித் சீற்றம்

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவருக்குக் கொலை மிரட்டல்! – சபையில் சஜித் சீற்றம்

2 minutes read

“ஜனாதிபதியும் அரசும் கூட்டுப்பிரயத்தனங்களால் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிக்கின்றனர். தேர்தலை ஒத்திவைக்கும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. நடைமுறையிலுள்ள சட்டத்தின் பிரகாரமே தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அது எதிர்காலத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு இடையூறாக அமையும்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (19) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மீதான விவாதம் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேலும் கூறுகையில்,

“மக்களின் தேர்தல் உரிமையை மீறி அரசு செயற்படுகின்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கப் பல்வேறு தந்திரங்கள் கையாளப்படுகின்றன.

இந்நேரத்தில் எதிர்ப்புத் தெரிவிக்காவிட்டால் ஜனாதிபதித் தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலையும் கூட அரசால் ஒத்திவைக்க முடியும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசு எல்லை நிர்ணய ஆணைக்குழுவைக் கொண்டு வருதல், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானம் தவறானது எனவும், பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன எனவும் கூறுதல், ஒரு கட்சியின் தலைவராகவும், உறுப்பினராகவும் இருந்து கொண்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை அழைத்து ஆவணங்களை பரிசீலித்தல் போன்ற சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் செயல்முறையைப் பாதிக்கும் விடயங்கள், தேர்தலுக்குப் பணமில்லை எனக் கூறுதல், பணத்தை அச்சடிக்க முடியாது என்ற நிபந்தனை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதான நடவடிக்கைகள் இதையே புலப்படுத்துகின்றன.

தேர்தலை நடத்துவதற்குப் பணமில்லை எனக் கூறிக்கொண்டே இரண்டு அமைச்சர்கள் இன்று (19) பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். அமைச்சர்களைப் பராமரிக்கப் பெரும் தொகையைச் செலவு செய்யும் அரசிடம் தேர்தலை நடத்துவதற்குப் பணமில்லை எனக் கூறுவது நகைப்புக்குரியது.

தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதில் பல குறைபாடுகள் இருந்தாலும் கொள்கையளவில் இது ஒரு நல்ல விடயம். ஆனாலும், இந்தச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டதன் நோக்கம் குறித்து பல சந்தேகங்கள் நிலவுகின்றன. இந்தச் சட்டமூலத்தைப் பயன்படுத்தி தேர்தலை ஒத்திவைக்க அரசு முயற்சித்து வருகின்றது.

தேர்தலை ஒத்திவைப்பதற்காகவே நேற்று (18) ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வந்தார். எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு இது பொருந்தாது என்ற ஷரத்து சேர்க்கப்பட்டால் இந்தச் சிக்கல் அவசியமில்லை” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More