உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்துக்குட்பட்ட கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளில் சுயேட்சைக் குழுவாக ஒன்றிணைந்து போட்டியிட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கரைச்சி பிரதேச சபை பின் முன்னாள் உப தவிசாளர் உள்ளிட்ட ஏராளமான கட்சி ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான தமிழரசுக் கட்சியின் மாவட்ட தலைமை இம்முறை ஆசனப் பங்கீடு விடயத்தில் கட்சிக்காகக் கடந்த காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களைப் புறம் தள்ளி, தகுதியானவர்களுக்கு இடம் கொடுக்காமல் தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மாத்திரம் ஆசன ஒதுக்கீடுகளை மேற்கொண்டமையால் அதிருப்தி அடைந்த தொண்டர்கள், தனிவழியே தேர்தலை எதிர்கொள்ள முடிவெடுத்து மிகப் பெரும் மக்கள் ஆதரவோடு சுயேட்சை குழு 1 இன் மூலம் களத்தில் இறங்கியுள்ளனர்.
அவர்கள் வேட்புமனுக்களைக் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று தாக்கல் செய்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
“நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் ஆதரவாளர்கள் என்றபடியால் எமக்கு இந்த அநீதி இழைக்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் தீவிர செயற்பாட்டாளர்களான நாம் மொத்தமாக கட்சியில் இருந்து பிரிந்து சென்று தனியாகத் தேர்தலை எதிர்கொள்கின்றோம்.
தேர்தல் முடிவுகளில் சுயேட்சைக் குழுவின் பிரசன்னம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதோடு ‘வீடு’ என்ற சின்னத்தை மாத்திரம் வைத்து தேர்தலில் வெல்லலாம் என்ற சிறீதரன் எம்.பி. தரப்பினரின் மாயையையும் தகர்க்கும்” – என்றனர்.