நுவரெலியா மாவட்டம், நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியின் சமர் செட் பகுதியில் இன்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் 7 பேர் சாவடைந்துள்ளனர். அத்துடன் 47 பேர் காயமடைந்துள்ளனர்.
டிக்கோயாவிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற வான் ஒன்றை, கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து பாடசாலை மாணவர்களைச் சுற்றுலாவுக்கு ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது ஓட்டோ ஒன்றும் விபத்துக்குள்ளானது.
வானில் பயணித்த 6 பேரும், ஓட்டோவில் பயணித்த ஒருவரும் விபத்தில் சாவடைந்தனர்.
அதேவேளை, வானில் பயணித்த 5 பேரும், பஸ்ஸில் பயணித்த 42 பேரும் காயமடைந்தனர்.
விபத்துக்குள்ளான பஸ் பள்ளத்தில் வீழ்ந்தது. இருள் காரணமாக மீட்பு நடவடிக்கையை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.
காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.