வட்டிப் பணத்தைப் பெறுவதற்காக கடன் வாங்கியவர்களைத் தாக்கிய கூலிப் படையைச் சேர்ந்த மற்றுமொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடன் வாங்கியவர்கள் வட்டி கட்டத் தாமதமாகியதை அடுத்து அவர்களிடமிருந்து பணத்தை வசூலிக்க அவர்களைக் கடுமையாகத் தாக்கி, காயப்படுத்தி மானபங்கப்படுத்திய வன்முறைக் குழு ஒன்றின் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின.
இதையடுத்து அந்தக் காணொளியில் உள்ளவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் இறங்கினர். தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை நேற்றுமுன்தினம் தாம் கைது செய்தனர் என்று பொலிஸார் அறிவித்திருந்தனர். அவரோடு இணைந்து செயற்பட்ட மற்றொருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.
இந்தக் கூலிப் படைச் செயற்பாட்டில் ஈடுபட்ட மற்றைய நபர்கள் குறித்து அவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.