அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியது அரசின் கடப்பாடாகும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஹட்டனில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“13ஆவது திருத்தச் சட்டம் என்பது சர்வதேச உடன்படிக்கையாகும். இந்தச் திருத்தச் சட்டம் நாட்டின் அரசமைப்பில் இருந்தாலும், அது இன்னும் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை.
பொலிஸ, காணி அதிகாரங்கள் தொடர்பில் போலியான விம்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதால், வடக்கு, கிழக்குக்கு மட்டும் அல்ல, 9 மாகாணங்களுக்கும் பயன் கிட்டும்.
எனவே, தமிழர்களுக்கு எதிரான சில சக்திகளே 13 தொடர்பில் போலிப் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன.
இவற்றை அரசு கருத்தில்கொள்ளாது, சர்வதேச உடன்படிக்கையான 13 ஐ அமுல்படுத்த வேண்டும்” – என்றார்.