கிளிநொச்சியைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜன் (வயது 31) ரயில் விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சோக சம்பவம் கொழும்பு – தெஹிவளையில் இன்று (30) இடம்பெற்றுள்ளது.
காலியில் இடம்பெற்ற ஊடகச் செயலமர்வில் கலந்துகொண்ட அவர், கொழும்பு நோக்கி வந்த ரயிலிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை 5.30 மணியளவில் தெஹிவளை ரயில் நிலையத்துக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சடலம் இன்றிரவு களுபோவில வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஒரு பிள்ளையின் தந்தையான நிபோஜன் கிளிநொச்சி மாவட்ட மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதற்காக ஊடகங்களுடன் இணைந்து சேவையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மாவட்டத்தில் சுயாதீன ஊடகவியலாளராகக் கடமையாற்றி வந்த எஸ்.என். நிபோஜன், பல அச்சுறுத்தல்கள் மத்தியிலும் கிளிநொச்சியில் இருந்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டங்கள், காணி விடுவிப்பு போராட்டங்கள் , மீள்குடியேறுபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எனப் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தவர்.
சிறந்த புகைப்படக் கலைஞராக – புகைப்பட ஊடகவியலாளராகப் பல கதை சொல்லும் புகைப்படங்களைச் செய்தி அறிக்கைகள் ஊடாக வெளிக்கொணர்ந்தவர்.