“தமிழ் மக்களுக்கான தீர்வு உடனடியாக வழங்கப்பட வேண்டும், ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நடவடிக்கைகள் காலத்தை இழுத்தடிப்புச் செய்பவையாக உள்ளன.”
– இவ்வாறு சுதந்திர மக்கள் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும எம்.பி. தெரிவித்தார்.
சுதந்திர மக்கள் கூட்டணி எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் நாடளாவிய ரீதியில் போட்டியிடுகின்ற நிலையில் அம்பாறை மாவட்டத்துக்கான சபைகளின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரை தெய்யத்தகண்டியில் நேற்று டலஸ் அழகப்பெரும சந்தித்துப் பேசினார்.
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி திலக் ராஜபக்ச உடன் வந்திருந்தார். அனைத்து கட்சி செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் முஹமட் முஸ்தபா முஹமட் நிஸாம் அடங்கலாக அரசியல் செயற்பாட்டாளர்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.
இந்தச் சந்திப்பில் டலஸ் அழகப்பெரும எம்.பி. மேலும் தெரிவித்ததாவது:-
“எனது மிக நீண்டகால அரசியல் பயணத்தில் நான் எப்போதும் நேர்மையானவனாகவே நடந்து வருகின்றேன். நான் மக்களின் பணத்தை எந்த வகையிலும் சுரண்டியதில்லை. இலஞ்சம், ஊழல், துஷ்பிரயோகம் ஆகியவற்றில் ஈடுபட்டவன் அல்லன்.
நாட்டுக்கும், மக்களுக்கும் மொட்டு நன்மை செய்யும் என்று நம்பி ஆதரித்தோம். அந்த நம்பிக்கை பொய் என்று கண்டபோதே அரசில் இருந்து விலகினோம். சுதந்திரம் கிடைக்கப் பெற்ற காலம் தொட்டு இந்த நாட்டில் தொடர்ச்சியாகக் குடும்ப ஆட்சியே நடந்து வருகின்றது.
மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்களே மாறி மாறி இந்த நாட்டை ஆண்டு வருகின்றனர். இதை மாற்ற வேண்டும் என்று நாம் விரும்பினோம். ஊழல் அற்ற ஆட்சியைக் கொண்டு வர எத்தனித்தோம். இதற்காகவே ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போட்டியில் பங்கேற்றேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னை ஆதரிப்பதாக இருந்தது. ஆனால், இறுதியில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. சம்பந்தன் கடைசி நேரத்தில் மாறி விட்டார்.
நாம் விரும்புகின்ற நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக இளையோர்கள் அடங்கலாக இந்த நாட்டு மக்களின் முன்னிலையில் வந்திருக்கின்றோம். தேர்தலில் போட்டியிடுகின்றோம். எமது வேட்பாளர்களை ஆதரியுங்கள்” – என்றார்.