வடக்கில் காணிகளை விடுவிக்கவேண்டாம் என்ற மாகாநாயக்கர்களின் எதிர்ப்பையும் மீறி வலிகாமம் வடக்கில் 108 ஏக்கர் காணி நாளை வெள்ளிக்கிழமை பாதுகாப்புத் தரப்பினரால் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திடம் ஒப்படைக்கப்படுகின்றது. பலாலி அன்ரனிபுரத்தில் இதற்கான நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
இராணுவத்தினரிடமிருந்து காங்கேசன்துறை மத்தியில் (ஜே/234) வெளிச்சவீட்டிலிருந்து துறைமுகம் வரையிலான பிரதேசத்தில் 40 குடும்பங்களுக்குச் சொந்தமான 26 ஏக்கர் காணியும், அதே கிராம அலுவலர் பிரிவில் இராணுவத்தின் பொறியியல் பிரிவு அமைந்துள்ள 24 ஏக்கர் காணி விடுவிக்கப்படுகின்றது. இது 45 குடும்பங்களுக்குச் சொந்தமானது.
மயிலிட்டி வடக்கு (ஜே/246) கிராம அலுவலர் பிரிவில் 17 குடும்பங்களுக்குச் சொந்தமான 16 ஏக்கர் காணியும், பலாலி வடக்கு அன்ரனிபுரத்தில், பருத்தித்துறையில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவதற்காக 13 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளது.
நகுலேஸ்வரம் (ஜே/245) இல் 20 குடும்பங்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணியும் நாளை ஒப்படைக்கப்படவுள்ளது.