தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு – கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர்களின் அழைப்பின்பேரிலேயே இந்தக் ஹர்த்தால் நடைபெறுகின்றது.
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினம் இன்றாகும். இந்த நாளை கரிநாளாகக் கடைப்பிடிக்குமாறு முன்னரே பல்கலைக்கழங்களின் மாணவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இந்தநிலையில், தமிழ் மக்கள் – தாயகம் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறை – ஆக்கிரமிப்பு என்பவற்றுக்கு எதிராகவும், இராணுவம் வெளியேற வேண்டும், சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று வலியுறுத்தியும், பொருளாதாரப் பிரச்சினையால் நடக்கும் தீர்வுப் பேச்சு எனும் போலி நாடகத்தைச் சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் முகமாகவும் இன்றைய தினம் வடக்கிலிருந்து கிழக்குக்கு பேரணி ஒன்று மாணவர்கள் தலைமையில் ஆரம்பமாகின்றது.
இந்நிலையில், இன்றைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு நேற்றுமுன்தினம் பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இவர்களின் இந்தக் கோரிக்கைக்குத் தொழில்சங்கங்கள், வர்த்தகர் சங்கங்கள், அரசியல் கட்சிகள் எனப் பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.