செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புதிய இலங்கையை உருவாக்குவேன்! – ரணில் நம்பிக்கை

புதிய இலங்கையை உருவாக்குவேன்! – ரணில் நம்பிக்கை

2 minutes read

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இத்தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“கடந்த 75 ஆண்டுகளில் நாம் அடைந்தவற்றை விட இழந்தவையே அதிகம். அவ்வாறு இழந்தவற்றை மீளப்பெறுவதற்காக உலகப் பொருளாதாரத்தில் பாரிய பங்கை மீண்டும் பெறுவதற்கு தேவையான உத்திகளை வகுப்பதே இந்த ஆண்டு நமது முதன்மை நோக்கமாகும்.

அதற்கான புதிய பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்த திட்டத்தை நாட்டில் தற்போது முன்வைத்துள்ளோம். பெருமைமிகு தேசமாக இருந்த இலங்கையர்களின், கடந்த கால பலத்தை மீண்டும் மீட்டெடுத்து, நவீன தொழில்நுட்பத்துடன் ஒன்றிணைந்து, போட்டி நிறைந்த உலகப் பொருளாதாரத்தின் புதிய இலக்குகளை நோக்கி நாம் துரிதமாக நகர வேண்டும்.

2023 இல் 75 ஆவது சுதந்திர தின விழாவுடன் ஆரம்பமாகும் இப்புதிய மறுசீரமைப்புப் பயணத்தை, 2048 ஆம் ஆண்டு 100ஆவது சுதந்திர தின விழா வரை, மாறாத அரச கொள்கையை நிலைநிறுத்துவதே எமது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். நூற்றாண்டு சுதந்திர தினத்தின்போது நாட்டு மக்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளும் பூர்த்திசெய்யப்பட்ட, உயர் பொருளாதார எழுச்சியைக் கொண்ட, உலகளாவிய மூலதனத்தின் மையமாக விளங்கும் புதிய இலங்கையை உருவாக்க முடியும் என்று நான் திடமாக நம்புகிறேன். அதற்காக, இன்றே எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அச்சமின்றி முன்னெடுப்பேன் என உறுதியளிக்கிறேன். அதற்கு உங்கள் நம்பிக்கையையும் ஆசிகளையும் நான் எதிர்பார்க்கிறேன்.

அணிசேரா என்றபோதும் தீர்க்கமான பலமுள்ள, பின்வாங்காத, காலநிலை மாற்றத்திற்கு தீர்வு காண்பதுபோன்ற நிலையான இலட்சியங்களுடன் கூடிய புதிய வெளியுறவுக் கொள்கையை தற்போது செயல்படுத்தி வருகின்றோம். உலகின் அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயற்படக்கூடிய இலங்கையர் என்ற வகையில் புதிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.

உலகம் முழுவதும் வாழும் இலங்கை மக்கள் எமது நாட்டின் அபிவிருத்திக்காக வழங்கி வரும் பங்களிப்பை நான் நன்றியுடன் நினைவுகூருகின்றேன். நமது இளைஞர் சமூகம் புதிய தொழில்முயற்சிகளை தொடங்குவதற்கான திட்டங்களை கொண்டிருந்தாலும் மூலதன பற்றாக்குறை பிரச்சினையாக உள்ளது. எமது இளம் சந்ததியின் அத்தகைய திட்டங்களில், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு முதலீடு செய்யும் திறன் உள்ளது. எனவே, இந்த நாட்டில் உள்ள இளைஞர் சமூகமும், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் புதிய வர்த்தகத் திட்டங்கள் மூலம் இலங்கையின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப பாடுபடுவார்கள் என நான் நம்புகின்றேன்.

பொருளாதார ரீதியில் மிகவும் சவாலான இக்காலகட்டத்தில் அதிக பொறுமையுடனும் உறுதியுடனும் செயற்படுவதன் மூலம் இப்புதிய சமூக சீர்திருத்த திட்டத்திற்கு பங்களிக்குமாறு அனைத்து இலங்கையர்களிடமும் நான் கேட்டுக் கொள்கின்றேன்.

முன்னேற்றமடைந்த சமூக, பொருளாதார, அரசியல் வெளியில் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் இலங்கையொன்று உருவாக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்” – என்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More