“எதிர்கால ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்காகவே அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேசுகின்றார்.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வுக்காக அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தேவை என்ற
நிலைப்பாட்டில் நாம் இருக்கின்றோம். 13 ஐ நடைமுறைப்படுத்துவதற்கு முன் அந்த 13 இற்குள் இருக்கின்ற மாகாண சபைகளுக்கான தேர்தலை முதலில் நடத்த வேண்டும். நீண்ட காலமாக அந்தத் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கின்றது.
எதிர்கால ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக – அவர்களின் வாக்குகளை அபகரிப்பதற்காகவே 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேசுகின்றார். அதற்கு நாம் எதிர்ப்பு. இதற்காகத்தான் நாம் கடந்த சர்வகட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.” – என்றார்.