நான் தேர்தலை ஒத்திப்போடுவதாக எங்கும் சொல்லவில்லையே என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதனால் திட்டமிட்ட திகதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்கலாம் என்ற முடிவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் வந்துள்ளார்கள் என்று தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
தேர்தல் நடக்குமா, இல்லையா என்ற சந்தேகம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல அரச தரப்பு எம்.பிக்களுக்கும்தான் உண்டு. தேர்தல் நடக்குமா, இல்லையா என்று ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவுக்கு மட்டும்தான் தெரியும். அவர் இறுதி நேரத்தில் என்ன முடிவை எடுக்கப்போகின்றார் என்று அவர் மட்டுமே அறிவார். அவரது திட்டங்களை அவரது ஆட்களுக்கே சொல்லமாட்டார். இதனால் அரசுக்கே குழப்பம்தான்.
கடந்த வாரம் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் இது பற்றி பேசப்பட்டது. தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்றார் ரணில். அப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்த்தன எந்தத் தேர்தலுக்கு என்று கேட்டார். அதற்கு “எல்லாத் தேர்தலுக்கும்” என்றார் ரணில்.
இதன்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்குமா என்று அங்கிருந்தவர்கள் ரணிலிடம் மீண்டும் கேட்டனர். நான் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திப்போடுவதாக எங்கும் சொல்லவில்லையே என்றார் ரணில். இதனால் தேர்தல் நடக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள்.
மற்றுமொரு கூட்டம் பஸில் ராஜபக்சவுக்கும் மொட்டுக் கட்சி முக்கியஸ்தர்களுக்கும் இடையில் கடந்த வாரம் இடம்பெற்றது. அங்கு தேர்தல் கட்டாயம் இடம்பெறும் என்றார் பஸில். இதனால் மொட்டுக் கட்சியின் பக்கம் இருந்த சந்தேகமும் தீர்ந்துவிட்டது. அதுமாத்திரமன்றி, இந்தத் தேர்தலில் மொட்டுக் கட்சியை வழிநடத்திச் செல்லும் பஸில் மொட்டின் வெற்றி, தோல்வியைப் பற்றி அக்கறைகொள்ளவில்லையாம். அவருக்குத் தெரியும் உண்மையான நிலைமை. அதனால் தேர்தலை நடத்தினால் போதும் என்ற நிலைப்பாட்டில் உள்ளாராம். – என்றுள்ளது.