இந்திய மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் கலாநிதி எல்.முருகன் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ் நாட்டுத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட இந்தியக் குழுவினர் தனி விமானம் மூலம் பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தனர்.
யாழ்ப்பாணத்தை நேற்று வந்தடைந்த முதல் நாளிலேயே அவர்கள் பல்வேறு இடங்களிற்கும் சென்று பார்வையிட்டனர். நேற்றுப் பகல் யாழ்ப்பாண நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாண மக்கள் 250 பேரு உலர் உணவு உதவிப் பொதிகளை இணை அமைச்சர் வழங்கி வைத்தார். நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதுவரும் கலந்துகொண்டார்.
பின்னர் காங்கேசன் துறைமுகத்துக்குச் சென்ற இந்தியக் குழுவினர், இந்திய உதவியில் அங்கு செய்யப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் ஆராய்ந்தனர். பாண்டிச்சேரிக்கும் காங்சேன் துறைக்கும் இடையே தொடங்கப்படவுள்ள பயணிகள் கப்பல் சேவையின் சாத்தியங்கள் தொடர்பிலும் ஆராய்ந்தனர்.
காங்கேசன்துறையை அடுத்து மயிலிட்டி மீன் பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, எல்லை தாண்டிய குற்றத்திற்காகப் பறிமுதல் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் விசைப்படகுகளையும் பார்வையிட்டனர்.
மாலையில் மன்னார் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் 150 பேருக்கு உணவுப் பொதி வழங்கி வைக்கும் நிகழ்விலும் இந்தியக் குழுவினர் பங்கேற்றனர்.
இந்திய இணை அமைச்சர் கலாநிதி எல்.முருகன் தலைமையிலான குழுவினர் நாளைமறுதினம் வரை யாழ்ப்பாணத்தில் தங்கியிருப்பர்.