யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள இலங்கையின் 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தப் போவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் அறிவித்துள்ளன.
கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஸ் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
நாளை சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாகப் போராட்டம் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாளைய தினம் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போகின்றார்கள் என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இன்று அறிவித்தது.
தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையிலும் பொருளாதாரப் பின்னடைவு நேரத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் இரண்டாவது தடவையாகத் தேவையில்லை என்று யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர்.
தமது கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்த மாணவர்கள் போராட்டம் தொடர்பான அறிவிப்பை விடுத்தனர்.
நாளைய தினம் நண்பகல் 12 மணியளவில் யாழ். பல்கலைக்கழக முன்றலில் மாணவர்களும் பொதுமக்களும் இணைந்து இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்துவர் என்று மாணவர்கள் அறிவித்தனர்.