யாழ்ப்பாணம் மாநகரில் நாளை (11) நடைபெறும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்துக்கு நீதிமன்றம் தடைக் கட்டளை வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி முன்வைத்த விண்ணப்பத்துக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் இந்தத் தடை உத்தரவை வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தில் நாளை மாலை 5 மணியளவில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கின்றார்.
இந்த நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை பிற்பகல் 3 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாகப் போராட்டம் நடத்தத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்திருந்தது.
இந்தநிலையில் இந்தப் போராட்டத்துக்கு தடை உத்தரவு கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் நேற்று விண்ணப்பம் செய்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி க.சுகாஷ் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக இந்தத் தடை உத்தரவு கோரப்பட்டது.
யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் பொலிஸாரின் விண்ணப்பத்தை முகத்தோற்றளவில் ஏற்று தடைக் கட்டளையை வழங்கினார்.