மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
நட்பு நாடுகள் என்ற வகையில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலுள்ள நீண்டகால நெருங்கிய உறவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா உள்ளிட்ட குழுவினருடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.
இந்தச் சந்திப்பைக் குறிக்கும் வகையில் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பாகிஸ்தான் கடற்படையின் ரியர் அட்மிரல் அப்துல் பாஸித் பட் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.