யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெறும் இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
75 ஆவது சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெறுகின்றது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தநிலையில், நீதிமன்றத் தடை உத்தரவை மீறியமை மற்றும் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 18 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
முன்னதாக குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்ராசா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி க.சுகாஷ் உள்ளிட்ட 8 பேருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.
யாழ். தலைமையகப் பொலிஸ் நிலையத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெறும் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.