“தயவுசெய்து சமஷ்டி தீர்வைக் கேட்க வேண்டாம் என்று தமிழ்த் தலைவர்களிடம் சொல்கின்றோம். சமஷ்டிக்கு நாம் கடும் எதிர்ப்பு. ஒருபோதும் சமஷ்டி தீர்வை நிறைவேற்றவே முடியாது.”
– இவ்வாறு இராஜாங்க அமைச்சர் கே.டபிள்யூ. சாந்த பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“வடக்கு – கிழக்குதமிழ் மக்கள் அன்றிருந்து இன்று வரை கேட்பது அரசியல் தீர்வைத்தான். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்குக்குச் செல்கின்ற போது தமிழ் மக்கள் அரசியல் தீர்வு கோரி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், ஒற்றையாட்சிக்குள் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது என்றும், நாட்டைப் பிரிப்பதற்கு இடமளிக்கமாட்டாது என்றும் ஜனாதிபதி கூறி வருகின்ற போதிலும் சிலர் ஜனாதிபதிக்கு எதிராக – அரசியல் தீர்வுக்கு எதிராகப் பேசி வருகின்றனர்.
தமிழ்த் தலைவர்களிடம் ஒன்றைச் சொல்ல விரும்புகின்றோம். தயவு செய்து சமஷ்டி தீர்வைக் கேட்க வேண்டாம். சமஷ்டிக்கு நாம் கடும் எதிப்பு. ஒருபோதும் சமஷ்டி தீர்வை நிறைவேற்றவே முடியாது.
தமிழ்த் தலைவர்கள் சிலர் உண்மையில் தீர்வை விரும்பவில்லை. தீர்வு கிடைத்துவிட்டால் அவர்களால் அரசியல் செய்ய முடியாது. இதனால்தான் அவர்கள் வழங்கப்பட முடியாத சமஷ்டி தீர்வைக் கேட்கின்றனர்.
நாம் ஒற்றையாட்சிக்குள் தீர்வை வழங்கத் தயார். அரசு தேர்தலை ஒத்திப்போடுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
பொருளாதாரப் பிரச்சினை என்று வரும்போது அது இந்த நாட்டுக்கு மட்டும் உரியது அல்ல. முழு நாட்டிலும் உள்ளது. இங்கிலாந்தில்கூட இப்போது வாழ்க்கைச் செலவீனம் அதிகரித்துள்ளது.
இப்போது எமது நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாக தீர்ந்துகொண்டு வருகின்றது. இந்த வருட இறுதிக்குள் நாம் ஒரு நல்ல நிலைக்கு வந்துவிடுவோம். மக்கள் அனைவரும் எமது இந்த வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” – என்றார்.